13ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் இலங்கை அரசுடன் இந்தியா முக்கிய பேச்சுகளை நடத்துமென இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி தெரிவித்திருக்கிறார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழு நேற்றுக்காலை புதுடில்லியிலுள்ள “ஜன்பத்’ இல்லத்தில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியைச் சந்தித்தது. அமைச்சர் ஆறுமுகனுடன் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் இராஜதுரை, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மதியுகராஜா, அனுஷியா சிவராஜா ஆகியோரும், காங்கிரஸ் தரப்பில் மத்திய இணையமைச்சர் நாராயணசாமியும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இலங்கை அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் குறித்து இங்கு விரிவாகப் பேசப்பட்டதுடன் தமிழ் மக்களின் முக்கியமான பிரச்சினைகள் அதன் அடிப்படையில் தீர்க்கப்படவேண்டுமென்பதே இந்தியாவின் விருப்பமென்ற சாரப்பட சோனியா காந்தி இந்தச் சந்திப்பில் கருத்து வெளியிட்டார் என உயர்மட்ட இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் நேற்றிரவு தெரிவித்தன.
இலங்கையிலுள்ள 13 ஆம் அரசமைப்பு, மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கான தனித்தன்மை, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்பவற்றைக் கருத்திற்கொண்டு இந்திய அரசால் மலையக மக்களுக்கு உதவிகள் கிடைக்க வேண்டும் என இச்சந்திப்பின்போது சோனியாவிடம் இ.தொ.கா. கோரிக்கை விடுத்ததாவும் தெரிவிக்கப்பட்டது.