புதிய தமிழீழ திட்டத்திற்கு இடமளிக்க கூடாது எனவும் முன்னாள் ஜனாதிபதிகள் பிரேமதாச மற்றும் சந்திரிகா ஆகியோர் வழங்காத காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழங்கக் கூடாது என பாணந்துறை நகர முதல்வர் நந்தன குணதிலக்க தெரிவித்துள்ளார்.
காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களுடன் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடாது, அதனை இரத்துச் செய்து விட்டு, அந்த தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த அதிகாரங்களுடன் தேர்தல் நடத்தப்பட்டால் அது தனித் தமிழீழத்திற்கு பாதை திறக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களுடன் வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி தேசிய சுதந்திர முன்னணி நாடு முழுவதும் மேற்கொண்டு வரும் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, குறித்த மனுவில் கையெடுத்திட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நந்தன குணதிலக்க ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது, அதில் இருந்து பிரிந்த விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் செயலாளராக செயற்பட்டு வந்தார். பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு, பாணந்துறை நகர முதல்வாராக தெரிவுசெய்யப்பட்டார்.