மாகாண சபை அதிகாரங்களில் திருத்தங்கள் தொடர்பாக இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் :

மாகாண சபைகளின் அதிகாரங்களில் திருத்தங்களை ஏற்படுத்துவது தொடர்பாக இன்று கூடும் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட உள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த திருத்த யோசனையை சமர்பித்ததுடன்,  அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் கருத்துக்களை முன்வைப்பதற்கான ஜனாதிபதி ஒருவார காலஅவகாசம் வழங்கினார்.
இதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் இலங்கை சமசமாஜ கட்சி, கம்யூனிஸ்ட்; கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ், தேசிய சுதந்திர முன்னணி, ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் தமது கருத்துக்களையும் கண்காணிப்புக்களையும் எழுத்து மூலமும், வாய்மொழிமூலமும் நேற்று (12) முன்வைத்தன.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள், யோசனைகளை கவனத்தில் கொண்டு இன்று கூடும் அமைச்சரவை தனது தீரமானத்தை எடுக்க உள்ளது.
13வது அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு அமைய ஏதேனும் ஒரு திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் போது, அதற்கான அனுமதியை மாகாண சபைகளிடம் இருந்து பெறுவது என்ற ஷரத்தில் திருத்தங்களை ஏற்படுத்தி, மாகாண சபையின் பெருபான்மையான உறுப்பினர்கள் அனுமதி அதற்கு போதுமானது என திருத்தம் செய்யப்பட உள்ளது. அருகில் உள்ள இரண்டு அல்லது மூன்று மாகாணங்களை இணைத்து ஒரு மாகாண சபையை ஏற்படுத்துவது தொடர்பான ஷரத்திலும் திருத்தம் செய்யப்பட உள்ளது.
இதனிடையே வடமேல் மாகாண சபையை இன்று அல்லது நாளை கலைப்பது குறித்து அரசாங்கம் தீர்மானிக்க உள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பாக இன்று கூடும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படலாம் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *