ஆஸ்திரேலியாவின் நீச்சல் வீராங்கனையான 28 வயதான “ச்லோ மெக்கர்டெல்” கியூபாவிலிருந்து ஃபுளோரிடா வளைகுடா வழியாக ஃபுளோரிடா வரை 60 மணி நேரத்தில் நீந்திச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.
அமெரிக்கா மற்றும் கியூபா நாடுகளின் உறவினை பலப்படுத்தும் விதமாகவே அவர் இந்த சாதனையை நிகழ்த்த திட்டமிட்டிருந்தார்.
சுறா மீன்களிடமிருந்து பாதுகாக்கும் கம்பித் தடுப்பு இல்லாமல் நீந்துவதற்கு அவர் முடிவெடுத்தார். மெக்கர்டெல் நேற்று தனது நீச்சல் சாதனையை கியூபாவில் இருந்து தொடங்கினார்.
ஆனால், நீந்தத் தொடங்கிய 11 மணி நேரத்திற்கு பிறகு கடலில் இருந்த ஜெல்லி மீன்கள் அவரைத் தாக்கத் தொடங்கின. இதனை சமாளிக்க முடியாமல் அவர் தனது சாதனையைக் கைவிட வேண்டியிருந்தது.
அவருக்குத் துணையாக பயணித்த படகு ஒன்றில் ஏற்றப்பட்ட அவர் அருகில் இருந்த கீ வெஸ்ட் என்ற இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவர் இதிலிருந்து மீண்டு வர 24 மணி நேரம் ஆகும் என்று கூறப்பட்டது. ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வாங்குவதைவிட கடினமான முயற்சி இது என்று மெக்கர்டெல் ஆரம்பத்தில் கூறியிருந்தார்.
இதற்காக அவர் ஆறு மாத காலமாகப் பயிற்சியும் எடுத்து வந்தார். சென்ற வருடம், அமெரிக்க நீச்சல் வீராங்கனையான 62 வயதான டயானா நியாட் நான்காவது முறையாக இந்த இடத்தை நீந்திக் கடக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது ஜெல்லி மீன்களின் தாக்குதலாலும் நீரின் போக்கினாலும் சமாளிக்க முடியாமல் பாதியில் கரை ஏறினார்.
1997ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் நீச்சல் வீராங்கனையான சூசி மெரோனி மட்டுமே தடுப்புக் கம்பிகளின் உதவியுடன் இந்த வளைகுடா பகுதியைக் கடக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்.