விடுதலைப் புலிகள் தொடர்பிலான வழக்கு சென்னை நீதிமன்றத்தில்!

விடுதலைப் புலிகள் தொடர்பிலான வழக்கு சென்னை நீதிமன்றத்தில்   வரும் ஏப்ரல்.9 வரை ஒத்திவைப்பு

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நியாயப்படுத்தி, மத்திய அரசு சமர்ப்பித்த பதில் மனுவை, தமிழ்நாடு அரசும் பின்பற்றுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கத்தின் மீதான தடையை இந்திய மத்திய அரசு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீடித்து வருகிறது. இறுதியாக, 2010ம் ஆண்டு மே மாதம், இந்திய அரசு விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு தடை விதித்து, அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

எனினும், இந்தத் தடை விதிக்கப்பட்டதற்கு போதிய காரணங்கள் உள்ளதா, இல்லையா என்பதை முடிவு செய்ய, தீர்ப்பாயம் ஒன்றையும் மத்திய அரசு அமைத்தது.

இதேவேளை, விடுதலைப் புலிகள் மீது தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தீர்ப்பாயத்தில் ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ உள்ளிட்டோர் மனுக்களைச் சமர்ப்பித்தனர். ஆனால் விடுதலைப் புலிகள் மீது மத்திய அரசு விதித்த தடை செல்லுபடியாகும் என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ தாக்கல் செய்த மனுவிற்கு, மத்திய அரசு தரப்பில் பதில் மனு சமர்பிக்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நியாயப்படுத்தி, இந்த பதில் மனு சமர்ப்பிக்கப்பட்டது.

இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்றத்தில் வைகோ முன்னிலையானார். இதன்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட பதில் மனுவில், மத்திய அரசு சமர்ப்பித்த பதில் மனுவை பின்பற்றுவதாகக் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, விடுதலைப்புலிகள் மீதான தடை குறித்த விசாரணை ஏப்ரல் 9ம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.