இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட வேண்டாம்!- இந்திய அரசுக்கு வைகோ எச்சரிக்கை!
ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயற்பட்டு தமிழினத்துக்கு துரோகம் இழைக்கக் கூடாது என இந்திய மத்திய அரசுக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வை.கோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2009ல் இந்த மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்திய அரசு தீர்மானத்தை நிறைவேற்றியதை சுட்டிக்காட்டியுள்ள அவர்,
தற்பொழுது ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்திலும் அத்தகைய துரோகத்தைச் செய்யக் கூடாது என இந்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் பெப்ரவரி 27ம் திகதி இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் விவாதம் நடைபெறவுள்ளது.
தற்போது இலங்கை அரசிற்கு எதிரான போர்க்குற்றச்சாட்டிற்கு சுயாதீன விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென சர்வதேசம் வலியுறுத்தி வருகிறது
அதேநேரம், தமிழனத்தை கொன்றொழித்த இலங்கை அரசை தொடர்ந்தும் இந்திய மத்திய அரசு ஆதரித்து வருகிறது. இந் நிலையை மாற்றி ஜெனீவா கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயற்படுவதைத் தவிர்க்க வேண்டும். என அவர் கோரியுள்ளார்.
கொடிய யுத்தத்தின் மூலம் ஈழத்தமிழினத்தை படுகொலை செய்த இலங்கை அரசுக்கும், அதற்கு உடந்தையாகச் செயற்பட்ட காங்கிரஸ் தலைமையிலான இந்திய மத்திய அரசுக்கும் வரலாற்றில் மன்னிப்பே கிடையாது.
ஈழத் தமிழர்களுக்கு விரோதமாக துரோகம் இழைத்து வரும் இந்திய அரசு நடைபெற்ற தமிழ் இனப் படுகொலையில் கூட்டுக் குற்றவாளியாகும் என்பது வரலாற்றில் மறைக்க முடியாத உண்மையாகும். என அவர் கூறியுள்ளார்.