சென்னை: எம்ஜிஆர் நினைவிட நுழைவு வாயில் நள்ளிரவில் திடீரென இடிக்கப்பட்டது. நினைவிடத்தை புனரமைக்க இடிப்பு பணிகள் தொடங்கியுள்ளதாக
அதிகாரிகள் தெரிவித்தனர். எம்ஜிஆர் நினைவிடத்தை பார்க்க வெளியூர்களிலிருந்து பொதுமக்கள் திரளாக வருவார்கள். அவரது தொண்டர்களும் அவ்வப்போது
நினைவிடத்துக்கு வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். இந்நிலையில் எம்ஜிஆர் சமாதியின் நுழைவு வாயில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில்
திடீரென ஜெசிபி இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இப்பணியில் 50க்கும் அதிகமான ஊழியர்கள் ஈடுபட்டனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. நள்ளிரவில் நுழைவு வாயில் இடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நுழைவு வாயில்
இடிப்பது வெளியில் தெரியாமல் இருப்பதற்காக எம்ஜிஆர் சமாதியை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு அதிகாரிகள் கூறுகையில், மறைந்த தலைவர்களின் நினைவை போற்றும் வகையில், அவர்களது நினைவிடங்கள் புனரமைக்கப்படும் என அரசு தெரிவித்திருந்தது.
இதன்படி அண்ணா நினைவிடத்தை புனரமைக்க ரூ.1.20 கோடியும், எம்ஜிஆர் நினைவிடத்தை புனரமைக்க ரூ.4.30 கோடியும், அவரது நினைவிடத்தின் முகப்புத்
தோற்றத்தை மாற்றிமைத்து, முன்புறத்தில் சுற்றுசுவர் கட்டுவதற்காக ரூ.3.40 கோடியும் என மொத்தம் ரூ.8.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையிலேயே எம்ஜிஆர் சமாதியின் நுழைவு வாயில் இடிக்கப்பட்டு, மாற்றியமைக்கப்படுகிறது என்றனர்.