Search

தூக்கத்தை கலைத்த கனவு ஒன்று (எனக்கு ஒரு கனவு உள்ளது) -ச ச முத்து.

பொதுவாகவே கனவுகள்கலையும்போது தூக்கமும் கலைவதுதான் இயல்பு-வழமை. ஆனால் ஐம்பதுஆண்டுகளுக்கு முன்னர் (1963 ஓகஸ்ட்28) ஒரு மனிதன் தனது கனவு பற்றி சொன்னபோது மனிதஇனத்தின் நீண்டதூக்கத்தை,ஆழ்ந்து உறைந்த மௌனத்தை அந்த கனவு கலைத்தது ஒரு சரித்திர நிகழ்வாகும். 1963ம்ஆண்டு ஓகஸ்ட்மாதம் 28ம்நாள் வொசிங்டனின் ஆப்ரகாம்லிங்கன் நினைவுமண்டபத்தின் படிக்கட்டுகளின் மேல் ஏறிநின்று லட்சோபலட்சம் மக்கள் முன்னால் மார்ட்டின் லூதர்கிங் ஆற்றிய நீண்டஉரையும் அதனூடாக அவர் சொன்ன I I ” ” I Have A Dream”என்ற வாக்கியமும் பிரகடனமும் அதுவரை வெறும் அரசியலமைப்பு வார்த்தைகளுக்குள்ளும் சட்டசொற்களுக்குள்ளும் இருந்துவந்த ஆணவத்தை உடைத்து நொறுக்கிவிட்டு போய் இருந்தது. பல லட்சம்கோடி மக்களின் கனவை மார்ட்டின் லூதர்கிங் தனது கனவாக அன்று பிரகடனம் செய்திருந்தார்.
மார்ட்டின் லூதர் கிங் என்ற மானுடஉரிமைப்போராளி, விடுதலைப்போராளியின் வாழ்வு வெறும் 39 ஆண்டுகளுக்குள் முடிவடைந்து போயிருந்தாலும் ஐம்பதுஆண்டுகளுக்கு முன்னர் அவர் நிகழ்த்திய என்ற இந்த உரையின் தாக்கம் இன்னும் சிலநூற்றாண்டுகளுக்காவது நிச்சயம் தொடரும் என்பது வரலாற்று உறுதி. நிறம்பார்த்து மனிதரை ஒதுக்கியும் தள்ளியும் அடக்கியும் வைத்திருந்த சமூகக்கொடுமைகளுக்கு எதிராகவும்,தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், தொடர்ச்சியான போராட்டங்களிலும் விழிப்புணர்வை ஏற’படுத்த வேண்டி நீண்டநடைப்பயணங்களிலும் தன் வாழ்வின் இறுதிநாள்வரைக்கும் உழைத்தவர் மார்ட்டின் லூதர்கிங்.
martin luther king
அவருடைய உரை என்பது வெறுமனே வார்த்தை ஜோடிப்புகளோ வசனப்பசப்புகளோ அல்லாமல் சத்தியமான செயற்பாடுகளுக்குள்ளான போராட்டங்களை நடாத்திய ஒரு மனிதனின் அடிமனதின் கனவு என்ற வகையில் அது எல்லோர் மனங்களையும் பற்றிக்கொண்டது.
எங்கெங்கு மனிதஉரிமைகள் மறுக்கப்பட்டு மானுடம்மறுதலிக்கப்பட்டதோ அங்கெல்லாம் மார்ட்டின்லூதர் கிங்கின் எதிர்ப்பும் குரலும் தோழனாக உடன்சென்றது.வியட்னாமின் விடுதலைக்கு எதிராக அமைரிக்கா நடாத்திய கொடும்போரை எந்தவித சமரசமுமின்றி எதிர்த்தவர் மார்ட்டின்லூதர் கிங்.

‘வெள்ளையருடன் ஒரே பாடசாலையில் ஒன்றாக அமர்ந்து கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்ட கறுப்புமனிதர்களும்,வெள்ளையர்களும் ஒரே தேசத்துக்காக வியட்னாமில் ஒன்றாக மடிவதன்’ அவலத்தை மிகதெளிவாக புரிந்து அதற்கு ஏதிராக குரல்கொடுத்தவர் மார்ட்டின் லூர்த கிங்.
(we have been repeatedly faced With the cruel irony of wathching Negro and white boys on TV screens as They kill and die together for a nation that has been unable to seat them in the Same schools’ –martin Luther king) எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய ஓகஸ்ட்28 பிரகடனம்(உரை) தனித்து அமெரிக்க கறுக்குநிற மக்களுக்கு மட்டும் பொருந்தக்கூடியது அல்ல.இன்றும் இனி வரும்காலங்களிலும் விடுதலைதேடும் அனைத்து மக்களுக்கும் அது பொருந்தும்.
வறுமைக்குள்ளும்,பட்டினிக்குள்ளும் வாழ்வுமுடங்கிப்போன அனைத்து மனிதருக்குக்கும் அது ஒரு புதிய வீச்சை தரக்கூடியது.
உலகவரலாற்றில் என்றும் பதியப்பட்டுள்ள உரைகளுக்குள் மிகவும் ஆளுமைமிக்கது இந்த மனிதனின் ‘எனக்கு ஒரு கனவு இருக்கிறது’ உரை.
கனவுகளில் தீப்பிடிக்க வைத்தவனுக்கு என் கவிதை ஒன்று கீழே

கனவு மெய்ப்படும்….
——————

அதி குளிரும் மிக வெப்பமும்
இல்லாத காலமொன்றின் நாளில்
திசைகளதிர எழுந்தது அந்த குரல்.
‘எனக்கு ஒரு கனவு உள்ளது’.( I HAVE A DREAM)
நீள்துயில் கலைந்தெழுந்த
கறுப்புமனிதன் ஒருவனின்
கனவுகளின் தொகுப்பு அது.

மற்றைய எல்லோருமே
சுகங்களுக்கான கனவுகளுக்குள்
ஆழ்ந்து துயில் கொண்டிருந்தபோதில்
இவன் மட்டுமே
உன்னதமான சுதந்திரத்துக்கான
கனவொன்றை சொன்னவன்.

தொலைந்துபோன வாழ்வுகளை
கனவுகளுக்குள் எல்லோரும்
தேடி அலைந்து கொண்டிருந்த பொழுதில்
இவன்மட்டும் விடுதலைவாழ்வுக்கான
கனவொன்றை கண்டவன்-(எனக்கு ஒரு கனவு உள்ளது).

1963 ஓகஸ்ட்28ம் நாளில்
வொசிங்டன் நகரத்து
ஆப்பிரகாம் லிங்கன் நினைவிடத்து
படிக்கட்டுகளில் ஏறிநின்று
இவன் ஓங்கிக் கொடுத்த குரல்
பக்கத்தில் இருந்த வெள்ளைமாளிகையின்
நிறவாத சுவர்களை ஒருகணம் அசைத்திருக்கும்-ஐயம் இல்லை.

மார்ட்டின் லூதர் கிங்
நிறங்களால் பிரிக்கப்பட்ட
பள்ளத்தாக்குகள் சமனிடப்படவேண்டிய
கனவொன்றை உரத்து சொன்ன போராளி நீ.
ஜோர்ஜிய மாநிலத்து செம்மலைகளின் மீது
முன்னொரு காலத்தைய அடிமைகளின் பிள்ளைகளும்
எஜமானர்களின் பிள்ளைகளும் ஒருநாளில்
ஒரு மேசையில் ஒன்றாக அமர்ந்துபேசும்
காலம் ஒன்றை கனவு கண்டவன் நீயே.

உன்னுடைய கனவுகள் அனைத்தும்
கைவராது போகினும் இப்போது
வெள்ளைமாளிகையின் ஓவல்மண்டபத்துள்
ஒரு கறுப்புமனிதன் அமர்ந்திருக்கும்
சாத்தியம் ஒன்றை கைவரப் பெற்றுள்ளது.

இதோ மார்ட்டின்லூதர் கிங்,
எனக்கு ஒரு கனவு உண்டென்ற
உன் வார்த்தைகளை கேட்கும்போதெல்லாம்
என் தேசத்து புதல்வர் ஒவ்வொரின்
கனவுகளும் கண்முன்னே விரிகின்றது.
உன் கனவும் எம் கனவுகளும்
ஒன்றுதான் சகோதரனே- விடுதலைக்கான பெருங்கனவு.

எப்போதும் எங்கள் முதுகுமேல் ஏறிநின்று
எம்மை ஆட்சிசெய்யும் ஆதிக்ககனவு
கலைந்துபோகும் ஒரு நாளினில்தான்
எங்கள்கனவும் உன் கனவும் சத்தியமாகும்.
சாத்தியமும் ஆகும் காண்
கனவு மெய்ப்பட்டே தீரும் ஒருநாள்.
வெளிச்சம் எங்கும் நிறையும்வரைக்கும்
முற்றாக இருள் விலகும்வரைக்கும்
விடுதலையே எங்கும் விரியும்வரைக்கும்
உன் கனவு தொடரும்.
எங்களின் கனவும்தான்.
Leave a Reply

Your email address will not be published.