எதேச்சதிகார ஆட்சியை நோக்கி சிறிலங்கா நகர்ந்து கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்; ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். போர் முடிவடைந்து 4 ஆண்டுகள் ஆகி விட்ட போதிலும் மக்கள் தொடர்ந்தும் துன்பங்களையே அனுபவித்து வருவதாகவும் கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் நவநீதம்பிள்ளை குற்றஞ்சுமத்தினார்.
போர் முடிவுக்கு வந்து நாட்டில் அனைவரும் மகிழ்வுடன் வாழக்கூடிய நாட்டை கட்டியமைக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தும் மக்கள் துயரங்களை அனுபவிக்கும் அதேவேளை நாடு எதேச்சதிகார ஆட்சிமுறையை நோக்கி நகர்வதையிட்டு தாம் மிகுந்த கவலையடைவதாக இலங்கையில் நிலைமை கண்டறியும் சுற்றுப்பயணத்தின் முடிவில் நடத்திய ஊடக மகாநாட்டில் நவநீதம்பிள்ளை கூறினார். போர் நடைபெற்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் புனர் நிர்மாணபணிகள் அரசின் முக்கிய சாதனை என்றும் பாராட்டிய அவர் வெறும் கட்டுமானப்பணிகள் மட்டும் நல்லிணக்கத்தையும் கௌரவத்தையும் நிரந்தர அமைதியையும் ஏற்படுத்திவிட முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.
போரின் போது மக்கள் அனுபவித்த துயரங்களை ஆற்றுப்படுத்துவதில் உண்மையான நீதியான புனிதமான அணுகுமுறையை கடைப்பிடிக்கும் போது மட்டுமே நாட்டில் நிரந்தர அமைதியை நிலைநாட்ட முடியும் என்றும் தெரிவித்தார். மக்களின் அன்றாட வாழ்கையில் இராணுவம் ஆழமாக தலையிடும் சூழ்நிலை நிலவுவதையிட்டு கவலையடைவதாகவும் கூறிய அவர் மக்களின் சொந்த விவகாரங்களான கல்வி விவசாயம் மற்றும் சுற்றுலாப்பயணங்களில் கூட இராணுவம் அதிகம் தலையிடுவதை அவதானித்ததாகவும் கூறினார்.
கடந்த 25ம் தேதி முதல் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பல்வேறு பொது சமூக அமைப்புகளையும் சந்தித்து பேச்சு நடத்தியிருந்த நவநீதம்பிள்ளை நேற்றைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவையும் சந்தித்திருந்தார். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்து வரும் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என்று நவநீதம்பிள்ளை கூறினார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ வீரர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், போரின் போது பிடிபட்டவர்களின் மறுவாழ்வுக்கு அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் இலங்கையில் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்று தெரிவித்த அவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தை இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைப்புகளால், மனிதஉரிமை ஆர்வலர்கள் துன்புறுத்தப்படுவது அதிகரித்துள்ளது, இலங்கை சர்வாதிகாரப் பாதையில் செல்வதற்கான அறிகுறிகள் அதிகரித்துள்ளது மிகவும் ஆழமான கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த உண்மை கண்டறியும் பயணத்தின் போது, என்னுடன் கலந்துரையாடிய மனிதஉரிமை ஆர்வலர்கள் சிறிலங்கா காவல்துறை மற்றும் இராணுவத்தினரால் துன்புறுத்தலை எதிர்கொண்டது கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியாதது.
இது உயர்மட்டத்தில் உள்ளது. இதுபோன்று நடந்து கொள்வதற்கு, என்னைப் போன்றவர்களை அழைக்கக் கூடாது. இதுபோன்ற கண்காணிப்பும், துன்புறுத்தலையும் வைத்துப் பார்க்கும் போது, சிறிலங்கா மோசமான நிலையில் உள்ளது என்று தோன்றுகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். போரின் இறுதிக்கட்டத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நம்பிக்கையான விசாரணைகளை நடத்த தவறினால் சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்படும் வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்தார்.
எனது இந்திய தமிழ் பாரம்பரியத்தை அடிப்படையாக கொண்டு இலங்கையில் ஊடகங்கள், அமைச்சர்கள், வலையத்தளங்கள் மற்றும் பல்வேறு பிரசாரகர்கள் என்னை ஒரு புலிகளின் கருவி என பல வருடங்களாக விமர்சித்து வருகின்றனர்.
நான் விடுதலைப்புலிகளிடம் சம்பளத்தை பெற்றுக்கொண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பில் இருப்பதாக கூறுகின்றனர். விடுதலைப்புலிகள் போன்ற அமைப்புகளுக்கு ஆதரவு வழங்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கு, ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் இருந்து எந்த கௌரவத்தையும் எதிர்பார்க்க முடியாது.
இது மிகப்பெரிய தவறான குற்றச்சாட்டு மட்டுமல்ல பாரிய தாக்குதலாகும். கடந்த வாரத்திலும் அரசாங்கத்தின் குறைந்தது மூன்று அமைச்சர்கள் அசாதாரணமான கருத்துக்களை முன்வைத்திருந்தனர். எனினும் ஜனாதிபதி சில அமைச்சர்கள் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் மன்னிப்பு கோரினார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கின்றேன். காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழு பற்றிய மேலதிக தகவல்களை அரசாங்கத்திடம் கேட்டறிந்தேன்.
இந்த ஆணைக்குழுவானது கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட இது போன்ற ஆணைக்குழுக்களை விட புதிய ஆணைக்குழு மிகவும் பயனுள்ளதாக இருக்க வேண்டிய தேவையை வலியுறுத்தினேன். வடக்கு, கிழக்கில் மட்டும் காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய கிடைத்தமை ஏமாற்றத்தை அளிக்கிறது. கடந்த வருடங்களில் கொழும்பு உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளில் வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் பற்றிய பல முறைப்பாடுகள் கிடைத்தன. அவை தொடர்பான விடயத்தில் இருந்தும் தவறி விட மாட்டோம் என்றார்.
ஐநா மனித உரிமை ஆணையம் போன்ற மகிமைமிக்க உயர் நிறுவனத்திடம் புலிகள் போன்ற இரக்கமற்ற அமைப்புக்களுக்கு மரியாதை இருக்கும் என்று புலம்பெயர் தமிழர்கள் எதிர்பார்க்க முடியாது என்றும் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இந்திய பாராம்பரியத்தில் இருந்த நான் வந்தவர் என்பதால் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பு கருவி என சில அமைச்சர்கள், ஊடகங்கள் விவரித்தன. அவர்களால் காசுகொடுக்கப்பட்டவள் நான் எனவும் தமிழ் பெண் புலி எனவும் கூறினர். அது தவறானது. மிக ஆழமான தாக்குதல் ஆகும்.
மூன்று அரசாங்க அமைச்சர்கள் ஒன்று சேர்ந்து கடந்த வாரத்தில் என்னை விமர்சித்தனர். ஆனால் நான் ஒரு தென்னாபிரிக்கர். அதனை முன்னிட்டு பெருமிதம் அடைகிறேன் என்பதை முதலில் கூற வேண்டும்.
பல உயிர்களை கொன்றழித்த இரக்கமற்ற அமைப்பே புலிகள் அமைப்பாகும். நீலன் திருச்செல்வத்தையும் அவர்கள் கொலை செய்தனர். இப்படியான இரக்கமற்ற அமைப்புக்கு மகிமைமிக்க அமைப்பில் மரியாதை இடமுண்டென புலிகளிடம் பணம் பெறும் புலம்பெயர் அமைப்புக்கள் எதிர்பார்க்க முடியாது. 30 வருட யுத்தத்தில் உயிர் பலிகொடுத்த அனைத்து இலங்கையர்களையும் நான் மதிக்கிறேன்.
அவர்களுடைய குடும்பங்களுக்கு நான் அனுதாபத்தை தெரிவிக்க விரும்புகிறேன். அந்த இழப்பை அவர்களால் ஈடுசெய்துகொள்ள முடியாது. மோதல் முடிவடைந்தும் துன்பம் தீரவில்லை. வடக்கு தேர்தல் அறிக்கை நான் வரவேற்கிறேன். அமைதியான நீதியான சூழலில் தேர்தல் நடக்கும் என நான் நம்புகிறேன். அதிகார பகிர்வுக்கு அது புதிய கட்டமாக அமையும்.
சிவில் நடவடிக்கையில் (கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுலா) இராணுவ தலையீடு குறித்து கவலை அடைகிறேன். சில இராணுவ முகாம்கள் தேவை என்பது தெளிவு. ஆனால் காணி அபகரிப்பு சிவில் விடயங்களில் தலையிடுதலுக்கு கட்டுப்பாடு இருக்க வேண்டும்.
ஒரே இரவில் இராணுவத்தை குறைத்துவிட முடியாது என்ற பாதுகாப்பு செயலரின் கருத்தை நான் ஏற்கிறேன். ஆனால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு மாகாணங்களில் அந்த நடவடிக்கை விரைவுபடுத்தப்பட வேண்டும். தொடர்ந்து அதிக பாதுகாப்பு படை பிரசன்னம் காணப்பட்டால் அது இடையூறு மற்றும் கட்டுப்பாட்டுக்கு வழிவகுக்கும். பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் முறைப்பாடுகள் கவலையளிக்கின்றன. மாகாண அமைச்சர்கள், ஆளுநர்கள் கலந்து கொண்ட பாதுகாப்பு அமைச்சின் கூட்டத்தில் பாலியல் துஸ்பிரயோகம் குறித்து கடும் சவாலை நான் விடுத்தேன்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தினேன். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கான நேரம் இதுவெனவும் ஆலோசனை வழங்கியுள்ளேன். அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு வடக்கில் கட்டுப்பாடு விதித்துள்ளதை அறிந்து நான் அதிர்ச்சி அடைந்தேன். அந்த கட்டுப்பாட்டை அரசாங்கம் தளர்த்தும் என நம்புகிறேன். காணாமல் போனவர்களது உறவினர்களை சந்தித்து பேசினேன். அரசாங்கம் நியமித்துள்ள ஆணைக்குழுவிடம் இருந்து நான் கூடிய தகவல்களை எதிர்பார்க்கிறேன். வெள்ளை வேன் கடத்தல் குறித்தும் தகவல் அறிந்தேன்.
சட்டம் ஒழுங்கு என புதிய அமைச்சு உருவாக்கி பொலிஸ் அதிகாரங்கள் அதன் கீழ் கொண்டுவரப்பட்டாலும் இவ்விரு அமைச்சுக்களும் சிவில் அமைச்சரின் கீழ் அல்லது ஜனாதிபதியின் கீழ் உள்ளமை கவலையளிக்கிறது. மத ஸ்தலங்கள் தாக்கப்பட்டமை குறித்து கவலை அடைகிறேன். இதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் வீடியோ ஆதாரத்தில் இனங்காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். என்னை சந்தித்தவர்கள் சந்திக்க முயன்றவர்கள் அச்சுறுத்தப்பட்டமை குறித்து தகவல் கிடைத்துள்ளது. முல்லைத்தீவு மீள்குடியேற்ற கிராமங்களுக்குச் சென்று நான் திரும்பியதும் பொலிஸ், இராணுவம் அங்கு சென்றதாக அறிகிறேன்.
திருகோணமலையிலும் என்னை சந்தித்தவர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இலங்கையில் இவ்வாறான நிலை காணப்படுவது மிகவும் கவலையளிக்கிறது. இவ்வாறான நிலைக்கு முகங்கொடுத்துள்ள ஊடகவியலாளர்கள், சிவில் சமூக அமைப்பினருக்கு பாதுகாப்பு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன். 2005ம் ஆண்டுக்குப் பின் 30ற்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பிரகீத் எக்னெலிகொட உள்ளிட்ட பலர் காணாமல் போயுள்ளனர். பலர் நாட்டைவிட்டுச் சென்றுள்ளனர். உதயன் பத்திரிகை தொடர் தாக்குதலுக்கு உள்ளானது.
ஏனைய பத்திரிகைகளும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின. இலங்கையில் கருத்து வெளியிடும் சுதந்திரத்திற்கு பாதிப்பு உள்ளது. பல சார்க் நாடுகளில் உள்ளது போல தகவல் அறியும் சட்டம் இலங்கையில் கொண்டுவரப்பட வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். 18வது திருத்தம் தேர்தல் திணைக்களம், மனித உரிமை ஆணையம் போன்றவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதம நீதியரசர் நீக்கப்பட்டமை நீதித்துறை மீதான அரசியல் அழுத்தத்தை உறுதி செய்கிறது. இவ்வாறு நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்













Leave a Reply