யாழ். குடாநாட்டில் இதுவரை பதிவு செய்யப்படாத கடற்தொழில் படகுகளுக்கான பதிவுகள் கொழும்பில் இருந்து வருகை தந்த விசேட நடமாடும் குழுவினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நடமாடும் குழுவினர் சாவற்கட்டு கிராமத்தில் தமது பதிவுகளை ஆரம்பித்துள்ளனர் எனவும் யாழின் பல பாகங்களில் இந்த பதிவு நடவடிக்கை நடைபெறவுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2 நாட்களாக 244 படகுகள் இவர்களினால் பதிவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தொடர்ந்தும் இந்நடவடிக்கை தமது செயலகத்தால் மேற்கொள்ளப்படும் எனவும் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் டாக்டர். ராஜித சேனாரத்னவினால்; கடந்த மாதம் 29ஆம் திகதி வெளியிடப்பட்ட ஊடக அறிக்கைக்கு ஏற்ப நடமாடும் சேவைகள் மூலம் பதிவுக்குட்படுத்தப்பட்டு நிவாரண முத்திரை அடுத்த கட்டமாக வழங்கப்படவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் யாழ் மாவட்டத்தில் முதற்கட்டமாக 273 பேருக்கு நிவாரண முத்திரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் 5 ஆயிரத்து 83 பேருக்கு பதிவுகள் பூர்த்தி செய்யப்பட்டபின் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அத்திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.