பெரியண்ணாவைஎங்களுக்கு நன்கு தெரியும்.
அவனின் கழுகு கால்களில் படிந்திருக்கும்
குருதித்துளிகள் ஆதிச் சிவப்பிந்தியருடையதென
அவனின் ஆதிக்கபரப்பு மண்ணையும் கடந்து
விண்ணையும் தாண்டி நீள்கின்றதெனவும்
எமக்கு நன்கு புரிந்திருக்கிறதுதான்.
பொலிவியாவில் கோழைத்தனமாக
வீழ்த்தப்பட்ட சே யின் புதைகுழியும்
லத்தீன் நாடுகளின் சுதந்திர எழுச்சிகள்
அழிக்கப்பட்டு நிரவப்பட்ட குழிகளும்
பெரியண்ணா தேசத்து மண்வெட்டிகளாலேயே
அகலமாக ஆழமாக தோண்டப்பட்டதென
எமக்கு நன்கு தெரிகிறதுதான்.
பெரியண்ணா பேசப்பிடிக்காத சொற்களில்
எப்போதுமே முதலில் இருப்பது
‘சுதந்திரம்’ என்பது எமக்கு தெரியும்.
ஆனாலும் உலகக்குதிரையை விரட்டும்
சாட்டையும் மூக்கணாங்கயிறும்
எப்படியோ பெரியண்ணா கையில்தான்.
அதுவும் எமக்கு புரிகிறது.
ஆனால் எங்கள் நேரம் பாருங்கள்.
சின்ணண்ணாக்களும் இப்போது
பெரியண்ணா போலவே மாறிவிட்டிருக்கிறார்கள்.
செஞ்சேனை நடாத்திய சீனத்து அண்ணாவும்
பாடிஸ்டாவை வீழ்த்திய உலக புராதன
புரட்சிதலிவர் தாடிக்கார ‘பிடல்’ அண்ணாவும்
எல்லோரும் இப்போது தத்தமது
கைகளில் யாருடைதோ வழிந்த
குருதித்துளிகளுடனேயே இருக்கிறார்கள்.
எம்மை கொன்று குவித்த அதே
குருதி கைகளுடன் குலுக்கவும்
கொஞ்சவும் செய்கிறார்கள்.
நாம் நீதிகேட்டு பற்ற நினைக்கும்
அனைத்து கரங்களிலும் எப்படியோ
முள்ளிவாய்க்கால் குருதி படிந்திருக்கிறது.
எந்த தேசத்தலைவருக்கும் விரிக்கபடும்
செங்கம்பளத்தில் திட்டுதிட்டுக்களாக
எமது உறவுகளின் ரத்ததுளிகளே.
இந்த பாதை வழிதான் எமக்கான
சர்வதேச வாசல் அமைந்திருக்கு.
ஆபத்தானதுதான் ஆனாலும்
இதைவிட வேறு வழி எதுமேயில்லை.
விதையாகி வீழ்ந்தவரின்
நினைவுகள் தவிர வேறெதுவும் துணையில்லை.
(ஈழமுரசு 20-26 மார்ச் 2012)