ஈழத் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் இந்திய, தமிழக உறவுகளுக்கும் புலம்பெயர் உறவுகளுக்கும் யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர். தங்களுக்கு நீதி கிடைக்கும் வரை புலம்பெயர் தமிழர்களும் இந்திய உறவுகளும் தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டுமென்றும் யாழ். குடாநாட்டு மக்கள் கோரியுள்ளனர்.
தமிழக உறவுகளே…..!
எமக்காக நீங்கள் ஊண், உறக்கமின்றி ஒவ்வொரு நாளும் குரல் கொடுப்பதையிட்டு நாங்கள் பெருமையடைகிறோம். உங்கள் பணியை நாங்கள் பாராட்டுகிறோம். சிங்களத்திடமிருந்து எங்களைச் சிறைமீட்க உங்கள் கரங்கள் உயரும்போது எங்கள் கண்கள் பனிக்கின்றன.
தொப்புள் கொடி உறவுகளாக நீங்கள் இருக்கும் போது சிங்களம் தப்புக் கணக்குப் போட்டு எங்களை அழிக்க முயல்கிறது. எங்களைக் காப்பாற்ற நீங்கள் துடித்துக்கொண்டிருக்கும்வரை எங்கள் இதயத் துடிப்பை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் யாழ். குடாநாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.
புலம்பெயர் உறவுகளே….!
நீங்கள் நிலத்தை விட்டு புலத்தில் போய் வாழ்ந்தாலும் எங்களுக்காகக் குரல் கொடுக்கிறீர்கள். உங்களை நாங்கள் மதிக்கிறோம். உங்களை எங்கள் உயிராக நேசிக்கிறோம். ஈழத் தமிழருக்கு உரிமை கிடைத்தால் உங்களுக்குத் தானே அதில் பெரும் பங்குண்டு. உங்கள் அன்றாடப் பணிகளை நிறுத்தி உறவுகளுக்காக குரல் கொடுக்கிறீர்கள். உண்மையாகவே நீங்கள் மாமனிதர்கள் என்றும் யாழ். குடாநாட்டு மக்கள் பாராட்டியுள்ளனர்.
ஈழத் தமிழர்கள் எதுவும் செய்யாமலிருக்க நாங்கள் ஏன் அவர்களுக்காக வீதியில் இறங்கிப் போராட வேண்டுமென்று உங்களில் சிலர் நினைக்கலாம்.
அன்பானவர்களே…..!
ஈழத்திலே நாங்கள் எதையும் செய்ய முடியவில்லை. நிம்மதியாக வாழ முடியவில்லை. நீதியைக் கதைக்க முடியவில்லை. விழிமூடித் துங்க முடியவில்லை. சுதந்திரமாக நடமாடக் கூட முடியவில்லை. எங்கள் பிரச்சினைகளை எங்கும் சொல்ல முடியாமல் எங்களுக்குள்ளேயே புதைத்தபடி வேதனையால் விம்முகிறோம்.
உணர்ச்சி வசப்பட்டு ஒருசில வார்த்தைகள் கதைத்துவிட்டால் உடனே கழுகுகள் எம்மைச் சுற்றி வட்டமிடும். அரசுக்கு எதிராக நாம் எதைக் கதைத்தாலும் உடனே எங்கள் வீடு தேடி இராணுவம் வரும். இராணுவப் புலனாய்வாளர்கள் வருவார்கள். எங்களுக்குக் கிடைப்பது அடியும் உதையும் தான்.
விசாரணைகளின் போது வில்லங்கமாக ஏதும் கதைத்தால் உடனே கடத்திச் சென்று விடுவார்கள். இத்தகைய கொடியவர்களுக்கு மத்தியில்தான் இன்றும் நாம் உயிர் வாழ்கின்றோம். இந்த நிலையில் எம்மால் எதைத்தான் கதைக்கமுடியும்????
மனிதனற்ற மகிந்த ஆணையிட, கொடுங்கோலன் கோத்தா கொக்கரிக்க, போக்கிரி பொன்சேகா படை நடத்த ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வரை வன்னியில் மடிந்தனர். இதனை இன்று உலகின் பார்வைக்குக் கொண்டுவந்து போர்க்குற்றம் தொடர்பான கேள்வியெழுப்புவதற்கு காரண கர்த்தாக்கள் நீங்கள் தான். (இந்தியத் தமிழர்களுடம் புலம்பெயர் தமிழர்களும்) இதற்கு சனல் 4 தொலைக்காட்சியும் பெரும் பங்காற்றியுள்ளது. இதனை எமது வாழ்நாளில் என்றுமே மறக்கமாட்டோம் என்றும் யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஜ.நா இல் இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டு கொண்டுவரப்பட வேண்டும். இலங்கை அரசு தண்டிக்கப்பட வேண்டும். 30 வருட காலமாக தமிழ் மக்கள் அனுபவித்த கொடும் துன்பங்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும். இழந்தவைகளுக்கு நிகரான தீர்வு எமக்கு வேண்டும். அந்தத் தீர்வு எங்களுக்குக் கிடைப்பதற்கு நீங்கள் தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் யாழ். குடாநாட்டு மக்கள் புலம்பெயர் சமூகத்திடமும் இந்திய உறவுகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.