நெல்லை: கூடங்குளத்தில் உண்ணாவிரதப்போராட்டம் இன்றும் 6வது நாளாக நீடிக்கிறது. 6வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டு வரும் போராட்டக்குழு தலைவர் உதயகுமார் உள்ளிட்ட உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டோரின் உடல்நிலை மோசமாக உள்ளது. அவர்களை மருத்துவக்குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது. அதே சமயம் அணுமின் நிலையத்தில் 6வது நாளாக பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, அணுமின் நிலையத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. கடந்த 19ஆம் தேதி தமிழக அரசு அணுமின் நிலையத்தை இயக்க முடிவெடுத்ததை தொடர்ந்து கூடங்குளத்தில் 5000 போலீசார் மற்றும் துணை இராணுவ படையினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.
எந்தவித முற்றுகை போராட்டமும் கூடங்குளம் பகுதியில் நடைபெறாததால் போலீஸ் குவிப்பு தற்போது குறைக்கப்பட்டு உள்ளது. மேலும் போக்குவரத்தும் சீராக உள்ளதாகவும் மாவட்ட ஆட்சி தலைவர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். அணுமின் நிலையத்தின் முகப்பில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கலவர தடுப்பு வாகனமும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், தமிழக சிறப்பு அதிரடிப்படை போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர். தமிழக சட்ட ஒழுங்கு ஆணையர் ஜார்ஜ் இதனை கண்காணித்தார். இதனையடுத்து, தென்மண்டல ஐ.ஜி.ராஜேஷ்தாஸ் தலைமையில் காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆலோசனை கூட்டமும் நடைபெற்று வருகிறது. மேலும், இடிந்தகரையில் காவல்துறை செல்ல முற்பட்டால் பதற்றம் ஏற்படும் என்று காவல்துறை தயங்குகிறது.