சையன் குப்பியைக் காட்டி ஈழக் கனவை உருவாக்கிய மக்களை உடனடியாக மாற்ற முடியாது. வட மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமுன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனமானது நாட்டை பிரிக்கும் முயற்சிக்கே வித்திட்டுள்ளது. உள்ளக சுயநிர்ணய உரிமையை வழங்கினாலும் அதன் மூலமும் நாடு பிரியும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் அமைச்சருமான நிமால் சிறிபால டி. சில்வா தெரிவித்தார்.
எவ்வாறெனினும் தேர்தலின் பின்னர் கூட்டமைப்பு நாட்டை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டாலோ அல்லது தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் செயற்பட்டாலோ அதனை தடுப்பதற்கான மருந்து எம்மிடம் இருக்கின்றது. அந்த மருந்தை உரிய நேரத்தில் உரிய வகையில் நாம் பயன்படுத்துவோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வடக்கிலும் வெற்றிபெறவே ஆளும் கட்சி எதிர்பார்க்கின்றது. எனினும் மக்களின் தீர்ப்பு எவ்வாறு அமைகின்றதோ அதனை ஜனநாயக ரீதியில் ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றும் அவர் கூறினார்.
நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டை சீர் குலைப்பதற்கோ அல்லது நாட்டை இரண்டாக உடைப்பதற்கோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்குமானால் அதனை தடுப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். அதற்குத் தேவையானதை உரிய நேரத்தில் உரிய முறையில் நாங்கள் முன்னெடுப்போம். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் குறித்தோ அதன் முதலமைச்சர் வேட்பாளரின் கூற்றுக்கள் குறித்தோ நாங்கள் குழப்பம் அடையவேண்டியதில்லை. தேவையான நேரத்தில் என்ன செய்யவேண்டும் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும் எனவும் தெரிவித்தர்ர.
மேலும் வாக்குகளை பெறுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு இனவாத கூற்றுக்களை வடக்கில் வெளியிட்டுவருகின்றது. இதனை மக்கள் புரிந்துகொள்வார்கள். எனவே மக்கள் இதனை ஆதரிக்கின்றார்களா? என்பதனை பார்க்கவேண்டும். காரணம் தேர்தல் காலத்தில் இவ்வாறு மக்களின் உணர்வுகளைத் தூண்டி வாக்குகளை பெறும் முயற்சிகள் வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் இடம்பெறுவது வழக்கமாகும் என்றார் அவர்.
ஆனால் வாக்குகளை பெறவேண்டும் என்ற நோக்கத்தைத் தாண்டி தேர்தலின் பின்னரும் கூட்டமைப்பு இவ்வாறான நாட்டை துண்டாடும் வகையிலான செயற்பாட்டில் ஈடுபட்டால் அதற்கு என்ன மருந்து வழங்கவேண்டும் என்று எங்களுக்கு நன்றாக தெரியும். மேலும் மக்களுக்கு உண்மையும் யதார்த்தமும் நன்றாக தெரியும். எனவே அவர்கள் சிந்தித்து தேர்தலில் முடிவெடுப்பார்கள். மக்கள் புத்திசாலித்தனமானவர்கள் எனக் குறிப்பட்டார்.
நாட்டின் அரசியலமைப்பையும் இறைமையையும் தாண்டி எவரும் செயற்பட முடியாது. அவ்வாறு யாராவது செயற்பட்டால் அதற்கு என்ன செய்யவேண்டும் என்று எங்களுககுத் தெரியும். இது குறித்து தற்போது குழப்பமடையவேண்டியதில்லை. மருந்து எம்மிடம் உள்ளது எனவும் எச்சரித்தார்.
காரணம் எமக்கு உள்ள அனுபவங்களின்படியும் எமக்குள்ள அறிவின்படியும் பார்க்கும்போது வட மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனமானது நாட்டை பிரிக்கும் முயற்சிக்கே வித்திட்டுள்ளது என்றார்.
அத்துடன் தற்போது அவர்கள் உள்ளக சுயநிர்ணய உரிமை குறித்து பேசியுள்ளனர். உள்ளக சுயநிர்ணய உரிமையை வழங்கினாலும் அதன் மூலமும் நாடு பிரியும் என்பதனை வலியுறுத்துகின்றோம். இவை அனைத்தும் எமக்குத் தெரியும். எவ்வாறான சுய நிர்ணய உரிமையை வழங்கினாலும் ஆபத்து உள்ளது எனக் குறிப்பிட்டார்.
வடக்கு மக்கள் அனைவரும் கூட்டமைப்புடன் உள்ளதாக நாம் கருத முடியாது. பாராளுமன்ற உறுப்பினர்களை விட பொது மக்களே எமக்கு முக்கியமானவர்கள். அந்த மக்கள் தற்போது எமது பக்கம் வர ஆரம்பித்துள்ளனர். இது இலகுவான விடயமல்ல. கடந்த 30 வருடங்களாக பிரபாகரன் சயனைட் குப்பியை காட்டி ஈழம் என்ற கனவைக் காட்டி வந்தவர். எனவே அந்த மக்களை உடனடியாக எமது பக்கம் திருப்ப முடியாது. அதற்கு காலம் தேவை. அதனையே படிப்படியாக செய்துவருவதாக தெரிவித்தர்ர.
வடக்கில் வெற்றிபெறுவது எமது நோக்கமாகும். ஆனால் வடக்கு மக்கள் 100 வீதம் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது. எனினும் கணிசமானளவு வாக்குகள் எங்களுக்கு கிடைக்கும். எவ்வாறெனினும் வட மாகாண சபைத் தேர்தல் விடயத்தில் மக்களின் தீர்ப்பு எவ்வாறு அமைகின்றதோ அதனை ஜனநாயக ரீதியில் ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம். மக்களின் தீர்ப்புக்கு நாங்கள் எதிராக செல்ல முடியாது. அதனை ஏற்போம் என்றார் அமைச்சர்.