வட மாகாணசபைக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் வெற்றியீட்டினாலும் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் ஏனைய மாகாணசபைகளுக்கு வழங்கப்படும் அதேவிதமான அதிகாரங்களே வட மாகாணசபைக்கும் வழங்கப்படும் என அவர் தெரிவி;த்துள்ளார். வட மேல் மாகாணம் மற்றும் மத்திய மாகாணத்தில் ஆளும் கட்சி இலகுவில் வெற்றியீட்டும் எனவும் வடக்கு மாகாணத்தின் முடிவுகளை உறுதிபட குறிப்பிட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனியான நிர்வாக அலகொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக கோர முடியும் என்ற போதிலும், அரசியல் சாசனத்தின் அடிப்படையில் மாகாணசபைகளுக்கு அவ்வாறான அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அரசியல் சாசனமே முதன்மையானது எனவும், அதனை மீறி எவராலும் செயற்பட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் இராணுவ பிரசன்னம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.கடந்த ஆறு மாதங்களாக பெருமளவிலான படையினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலை போல் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை கலந்து கொள்ளும் தேர்தல் வேறு எதுவுமில்லை. இந்த தேர்தலை கண்காணிப்பதற்காக பொதுநலவாய நாடுகள் மற்றும் சார்க் நாடுகளின் கண்காணிப்பாளர்கள் வந்துள்ளனர்.
அரசாங்கம் வடமேல் மற்றும்; மத்திய மாகாணங்களில் இலகுவாக வெற்றிபெறும் எனினும் வடக்கில் அந்தளவுக்கு இலகுவற்ற வெற்றியை பெறும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.