தணலில் வெந்து கருகி பன்னிரு நாளாய் தன்னுயிரை வருத்தி சிரித்து சென்றவன்..!!!

தணலில் வெந்து கருகி பன்னிரு நாளாய் தன்னுயிரை வருத்தி சிரித்து சென்றவன்..!!!

 

தமிழின் காதலால் கலம்பகம் கேட்டு

தன்னையே சாம்பலாக்கிய நந்திவர்மனை ஒத்து

தமிழீழத்தின் மேல் உயிர் கொண்டு பட்டினித்

தணலில் வெந்து கருகி பன்னிரு நாளாய்

தன்னுயிரை வருத்தி சிரித்து சென்றவன்..!

 

ஊரெழுவில் உதித்த உதய சூரியன்…!

ஊட்டம் நிராகரித்து நீர் துறந்து

ஊனை உருக்கி உயிரையும் ஈர்ந்தான்

ஊமையாகிய இந்திய வல்லாதிக்கத்தால்..!!!

நல்லூரில் பார்த்தீபன்

நாவறண்டு நாடி துவண்டான்…!

பல்லூரிலிருந்தும் திரண்ட

பாசக்கார உறவுகளின்

கண்ணீர்களை பறித்து…

 

தமிழீழத்தின் தாகத்திற்கு

தன் நீரினை பருக்கியவன்…!

தன்னிகரில்லா உயிரினை

தியாகத்தில் எரிய வைத்தவன்…!

 

வஞ்சகம்  இழைத்த அயல் தேசத்தால்

நெஞ்சகம் துவண்டு போன உறவுகளின்

சந்ததிகளும் கண்ணீரோடு நினைவேந்தும்

பந்தத்தோடு பிரிந்து சென்றவன் திலீபன்…!!

தமிழ் மனங்களை சுட்டெரித்த செஞ்சூரியன்…!!

தமிழினத்தை இருள் நீங்கி விழிக்க வைத்த அகல் தீபம்..!!

தலைவரே  கண்ணீர் சிந்திய கண்ணியத்தியாக வீரன்…!!

 

இந்திய வல்லாதிக்க தேசத்தை – நாணி

சிரம் தாழ வைத்த தியாகச்செம்மல்….!!

மக்கள் புரட்சி வெடிக்க வேண்டுமென்றாய்.!

மனம் குளிர வானத்திலிருந்து பார்ப்பேன்

மலரும் சுதந்திர தமிழீழமதை என்றாய்…!!!

காலங்கள் கடந்து தான் போகின்றன…..!

காத்திருப்பும் நீண்டு தான் போகின்றது…!

தமிழீழமோ தனியரசோ ஆண்டாலும்

தரணியில் உன் நாமம் அழியாது அண்ணா…!!!

தமிழர்கள் இங்கு வாழும் வரை………………………..

 

அரசி நிலவன்

 

 

 

Leave a Reply

Your email address will not be published.