லண்டனில் வல்வை சிங்கிரி விளையாட்டுக் கழகம் வெற்றி!

25-3-2011 அன்று லண்டனில் திரு.மகேந்திரதாஸ் (ஆயக்கிளி) அவர்கள் ஞாபகர்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிங்கிரி (2 அணிகள்), உதயசூரியன் (2 அணிகள்), தீருவில் மற்றும் ரேவடி ஆகிய ஆறு அணிகள் பங்கு பற்றின,

இறுதி ஆட்டம் சிங்கிரி வி.கழதிற்கும் தீருவில் வி.கழகத்திற்குமிடையில் நடைபெற்றது. ஆரம்பத்திலிருந்தே ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. சிங்கிரி கழக வீரர் மயூரன் ரவிக்குமார் அடித்த முதலாவது கோல் மூலம் இடைவேளையின் போது சிங்கிரி கழகம் 1-0 என்று முன்னிலை வகித்தது. இடைவேளை முடிந்து போட்டி ஆரம்பித்து சில நிமிடங்களில் அஸ்வின் புவனேஸ்வரராஜா அடித்த அற்புதமான கோல் மூலம் சிங்கிரி கழகம் 2-0 என்று முன்னிலை பெற்றது. போட்டி முடிய 5 நிமிடங்கள் இருந்த போது தீருவில் கழக வீரர் நிவாசர் தெய்வேந்திரன் அடித்த சிறப்பான கோல் மூலம் போட்டி 2-1 என்றானது. இந்த நிலமையில் இறுதி 5 நிமிடங்கள் உச்சக்கட்ட பரபரப்பில் போட்டி நடைபெற்றது.

இறுதியில் 2-1 என்ற நிலையில் சிங்கிரி விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று முதலாம் இடத்தையும் தீருவில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.

முதலாம் இடத்திற்கான திரு.மகேந்திரதாஸ் (ஆயக்கிளி) அவர்கள் ஞாபகர்த்த சுற்றுக்கிண்ணம், இரண்டாம் இடத்திற்கான தில்லைநடராஜா லோகநாதன் (தங்கத்துரை) அவர்கள் ஞாபகர்த்த சுற்றுக்கிண்ணம் மற்றும் சுற்றுப்போட்டியின் சிறந்த வீரர் அஸ்வின் புவனேஸ்வரராஜாவின் தங்கப்பதக்கம் உற்பட்ட அனைத்து பரிசில்களும் எதிர்வரும் 31-3-12 அன்று நடைபெறவுள்ள மாபெரும் கலைச்சோலை நிகழ்வில் வழங்கப்படவுள்ளன.

பெண்களுக்கான பாடும் பந்துப் போட்டியில் முதலிடம் திருமதி. செல்வமதி ராஜசிங்கம் இரண்டாம் இடம் திருமதி. மாகாலெட்சுமி அருட்செல்வம் முன்றாம் இடம் திருமதி. ஸ்ரீலட்சுமி சௌந்தரராஜன்.

இச் சுற்றுப்போட்டி பற்றி கருத்து தெரிவித்த வல்வை புளுஸ்(ஜ.இ) தலைவர் திரு.இ.அருணாசலம் அவர்கள். திரு.மகேந்திரதாஸ் (ஆயக்கிளி) அவர்களாலேயே பல ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கிரி விளையாட்டுக் கழகம் ஆரம்பிக்கப் பட்டதாகவும், இன்று அவருடைய ஞாபகர்த்த சுற்றுப்போட்டியில் சிங்கிரி கழகம் வெற்றி பெற்றதை இட்டு தாம் மிகவும் மகிழ்ச்சி அடைவதுடன் இச் சுற்றுப்போட்டியை நடாத்திய ராஜம்மான் அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

சுற்றுப்போட்டியை நடாத்திய ராஜம்மான் அவர்கள் கருத்து தெருவிக்கையில், சுற்றுப்போட்டியில் பங்குபற்றிய கழகங்களுக்கும், பரிசில்களை அன்பளிப்பு செய்தோர்,vvtuk.com மற்றும் உதவிகள் புரிந்தோர் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்ததுடன், பெருவாரியான வல்வை மக்கள் மைதானத்திற்கு வருகை தந்ததையிட்டு தாம் மிகவும் மகிழ்வடைந்ததாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.