அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எப். கென்னடியின் சகோதரரும் பிரபல அமெரிக்க அரசியல் வாதியும், நியூ யார்க் நகர எம்.பி.யுமான ராபர்ட் கென்னடி 5.6.1968 அன்று துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இவரது சகோதரர் ஜான் எப். கென்னடியும் 1963-ம் ஆண்டு துப்பாக்கி குண்டுக்கு இரையானது குறிப்பிடத்தக்கது.
ராபர்ட் கென்னடியின் முழு பெயர் ராபர்ட் எப். பாபி கென்னடி ஆகும்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அம்பாசடர் ஓட்டலில் கட்சி தொண்டர்களிடையே உரையாற்ற ராபர்ட் கென்னடி 5.6.1968 அன்று நள்ளிரவில் சென்றார்.
அந்த ஹோட்டல் சமையல் அறை பகுதி வழியே சென்றால் கூட்ட அரங்கிற்கு விரைவாக சென்று விடலாம் என சிலர் கூறினர். இந்த முடிவுக்கு அவரது மெய்காப்பாளர்கள் சம்மதிக்கவில்லை.
அதையும் மீறி அவர் கூட்ட நெரிசல் மிக்க அப்பகுதி வழியாக நடந்து சென்ற போது பாலஸ்தீன நாட்டை சேர்ந்த சிர்ஹன் சிர்ஹன் என்ற இளைஞன் அவரை நோக்கி தனது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான்.
ராபர்ட் கென்னடியின் உடலை 3 தோட்டாக்கள் துளைத்தன. 5 மெய்காப்பாளர்களும் காயமடைந்தனர்.
உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மறுநாள் காலை மரணமடைந்தார்.
ராபர்ட் கென்னடி குண்டடிபட்டு தரையில் துடித்த காட்சியை பில் எப்ரிட்ஜ் என்ற புகைப்பட கலைஞர் தனது கேமராவில் சிறை பிடித்தார்.
மறுநாள் காலை பத்திரிகைகளில் அவை பிரசுரமாகி அமெரிக்க மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தின.
‘உங்களுக்கு அருகாமையில் துப்பாக்கி சூடு நடந்து பிரபல அரசியல்வாதி குண்டடி பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் வேளையில் உங்களால் எப்படி, ஆற அமர அந்த காட்சியை புகைப்படம் எடுக்க முடிந்தது ?’ என்று பில் எப்ரிட்ஜை நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அவர், ‘நாம் வெறும் நிருபர்கள் மட்டுமல்ல. வரலாற்றாளர்களும் கூட’ என அவர் பதிலளித்தார்.
இதைபோல், போர் காட்சிகள், உலக முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் நிகழ்வுகள், விளையாட்டு போட்டிகள் ஆகியவற்றை தன் காமிரா கண்களால் சிறைபிடித்து பலரது பாராட்டுகளை பெற்ற இவர் 1965-ம் ஆண்டு ஹெராயின் போதைக்கு அடிமையாகிப் போன நியூ யார்க் நகரில் வசிக்கும் இளம்தம்பதியர் தொடர்பான புகைப்பட கட்டுரையையும் வெளியிட்டு புகழின் உச்சிக்கே சென்றார்.
ஹாலிவுட்டின் தலைசிறந்த நடிகரான அல் பசினோவின் நடிப்பில் இந்த புகைப்பட கட்டுரையை ஆதாரமாக வைத்து ‘தி பேனிக் இன் நீடில் பார்க்’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டு ஹாலிவுட் வெற்றிப் படங்களின் பட்டியலில் நீங்கா இடத்தை பெற்றது.
இவ்வளவு சிறப்புகளுக்கு சொந்தக்காரரான பில் எப்ரிட்ஜ் (75) கடந்த மாதம் கீழே விழுந்து, காயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
உடலின் ரத்தத்தில் நச்சுத்தன்மை அதிகரித்ததால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.