பிரித்தானியாவில் தெற்கு லண்டனில் உள்ள சூப்பர் மார்க்கெற் ஒன்றில் வைத்து ஆயுததாரிகளால் சுடப்பட்டமையால் வாழ்நாள் முழுவதும் எழுந்து நடமாட முடியாத பேரவலத்துக்கு தள்ளப்பட்டு இருக்கின்ற இலங்கைத் தமிழ் சிறுமி துஸா கமலேஸ்வரனின் வைத்திய சிகிச்சைக்காக மனிதாபிமான நிதி சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றது லண்டன் பொலிஸ்.
துப்பாக்கி சுட்டு அனர்த்தம் இடம்பெற்று ஒரு வருடம் ஆகி விட்டது. ஆனால் துஸா வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றார். வார இறுதி நாட்களில் மாத்திரம் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றார். இவருக்கு விசேட உபகரணம் ஒன்றை ஏற்பாடு செய்து கொடுக்க பெற்றோர் பகீரத முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் இப்பெற்றோருக்கு உதவி செய்ய லண்டன் பொலிஸார் முன் வந்து உள்ளனர்.
துஸாவின் சிகிச்சைக்கு வேண்டிய நிதியை சேகரிக்க மனிதாபிமான நிகழ்ச்சி திட்டம் ஒன்றை முன்னெடுக்கின்றனர். இத்திட்டத்தில் 20 இற்கும் அதிகமான பொலிஸார் பங்கேற்கின்றனர்.இவர்கள் இந்நிதி சேகரிப்புக்காக பிரித்தானியாவின் மூன்று உயர்ந்த மலைகளில் 24 மணி நேர காலத்துக்குள் ஏற இருக்கின்றார்கள்.
இம்மலையேற்றம் எதிர்வரும் செப்டெம்பர் 22 ஆம் 23 ஆம் திகதிகளில் இடம்பெற உள்ளது.எவ்வளவு நிதியை சேகரிக்க முடியுமோ அவ்வளவு நிதியை சேகரிக்க வேண்டும் என்பதில் பற்றுறுதியாக உள்ளனர்.இதற்காக HSBC வங்கியில் பிரத்தியேக கணக்கு ஒன்றை ஆரம்பித்து உள்ளார்கள்.