அமெரிக்காவில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இடையே மோதல் நீடிப்பதால் கடும் நிதி நெருக்கடி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் எதிர்க்கட்சியின் நிபந்தனைக்கு அடிபணிய மாட்டேன் என்று ஜனாதிபதி ஒபாமா உறுதியாக கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 3 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ காப்பீட்டு திட்டம் கொண்டு வந்தார். இதன் மூலம் நடுத்தர, ஏழை மக்கள் பயன் அடைகிறார்கள். இதற்கு செனட்சபை ஒப்புதல் கொடுத்து விட்டது. இதனை அடுத்து சமீபத்தில் இத்திட்டம் உள்பட பல திட்டங்களின் நிதி ஒதுக்கீடு மசோதா பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்டது. இந்த சபையில் எதிர்க்கட்சியான குடியரசு கட்சிக்கு மெஜாரிட்டி இருப்பதால் அதை முடக்கியது.
இதனால் அத்தியாவசியம் இல்லாத அரசு நிறுவனங்களான தேசிய பூங்காக்கள், அருங்காட்சியகம் உள்பட பல நிறுவனங்கள் 1-ந்தேதி மூடப்பட்டது. சுமார் 10 லட்சம் ஊழியர்கள் சம்பளம் இன்றி கட்டாய விடுப்பில் சென்றனர். இதன் மூலம் வாரத்துக்கு ரூ.6 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.
இந்த அரசு நிறுவனங்கள் மூடல் நேற்று 5-வது நாளாக தொடர்ந்தது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் ஆளும் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி உறுப்பினர்கள் சந்தித்து தீவிர ஆலோசனை நடத்துகிறார்கள். ஆனால் இரு தரப்பினர் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடிப்பதால் நேற்று வரையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
ஜனாதிபதி ஒபாமாவும், ஆளுங்கட்சியினரும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நிறைவேற்றியே தீரவேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருக்கிறார்கள். இதில் அரசாங்கம் பின்வாங்கினால் குடியரசு கட்சியினர் வேறுசில திட்டம், ஈரான் பொருளாதார தடை விவகாரம் ஆகியவற்றில் தலையிடுவார்கள் என அஞ்சுகிறார்கள். அதே நேரத்தில் குடியரசு கட்சி அணித்தலைவர் ஜான் போஷ்னெர், ‘அரசாங்க நிறுவனங்கள் மூடலை பொதுமக்களோ, நாங்களோ விரும்பவில்லை. இதை அனைவரும் உட்கார்ந்து பேசினால் சுலபமாக தீர்க்கலாம். அதற்கு அரசு ஒத்துழைக்க வேண்டும்’ என்றார்.
இந்த விவகாரத்தை அரசாங்கம் சரியாக கையாள தவறி விட்டதாக குடியரசு கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளி கவர்னர்களான பாபி ஜிண்டால் (லூசியானா), நிக்கி ஹாலே (கரோலினா) ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். பாபி ஜிண்டால் கூறுகையில், ‘அரசாங்கத்தின் அன்றாட செயல்பாட்டுக்கு இது ஒரு சான்று’ என்றார். நிக்கி ஹாலே கருத்து தெரிவிக்கையில், ‘ஒபாமாவின் தலைமை முழுமையாக செயல் இழந்து விட்டது’ என்றார்.
இந்த விவகாரம் குறித்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். என்றாலும் தீர்வு காண மேலும் காலதாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
வருகிற 17-ந்தேதி வரையில் தான் இதற்கு கெடு இருக்கிறது. அதற்குள் தீர்வு காணப்படவில்லை என்றால் அமெரிக்க அரசாங்கம் கடனை செலுத்த முடியாத நிலை ஏற்படும். இதன் விளைவாக கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு விடும்.
இந்நிலையில் ஜனாதிபதி ஒபாமா தனது வாராந்திர வானொலி உரையில் இந்த நிதி மசோதா பிரச்சினையில் எதிர்க்கட்சியின் நிபந்தனைக்கு அடிபணிய மாட்டேன் என்று திட்டவட்டமாக எச்சரிக்கை விடுத்தார். அவர் கூறியதாவது:-
அரசாங்க நிறுவனம் மூடல் அறிவிப்பால் மக்களின் இதயத்தில் வேதனை குடிபுகுந்து விட்டது. இதனால் ஏராளமானோரின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டு இருப்பதாக எனக்கு கடிதம் எழுதி வருகிறார்கள். கடந்த சில நாட்களாக தங்களின் துயர நிலையை எடுத்துக்கூறி 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
வேலை பெறுவதற்காக எந்த ஒரு அமெரிக்கரும் பிணைத்தொகை வழங்க மாட்டார்கள். அதுவே அனைத்து பாராளுமன்ற உறுப்பினருக்கும் பொருந்தும். அதுபோல அரசாங்கம் மீண்டும் இயங்க நான் ஏன்? பிணைத்தொகை பரிமாறிக்கொள்ள வேண்டும். நெருக்கடியை தீர்க்க நான் யாருக்கும் பிணைத்தொகை கொடுக்க தயாராக இல்லை.
இந்த நிதி பிரச்சினையால் நாடு கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும். மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இந்த நிலைமையை எதிர்க்கட்சி புரிந்து கொள்ள வேண்டும். எனவே தனித்தன்மையை பார்க்காமல், நாட்டு நலனை கருத்தில் கொண்டு நிதி மசோதாவை நிறைவேற்ற எதிர்க்கட்சி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு ஒபாமா கூறினார். தனக்கு பொதுமக்கள் அனுப்பிய சில கடிதங்களையும் அவர் வாசித்தார்.
தற்போதைய நிதி நெருக்கடியால் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம்(நாசா) பணிகளும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அங்கு பணி புரிந்த 20 ஆயிரம் ஊழியர்களில் 95 சதவீதம் பேருக்கு கட்டாய விடுப்பு கொடுக்கப்பட்டது. இதனால் நாசா பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது.
இதன் விளைவாக விண்வெளி ஆய்வு மற்றும் விண்கலம் அனுப்பும் பணி பாதிக்கும். அதன் ஒருபகுதியாக செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா விண்கலம் அனுப்ப இருக்கும் திட்டப்பணிகளும் பாதிக்கப்பட்டு காலதாமதம் ஆகலாம் என கருத்தப்படுகிறது.