ஈழத்தில் நடந்த சகோதரச் சண்டைக்கு யார் காரணம்?

ஈழத்தில் நடந்த சகோதரச் சண்டைக்கு யார் காரணம்? கருணாநிதிக்கு பழ.நெடுமாறன் கேள்வி!

ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம், அதை மெய்யாக்கிவிட முடியும் என்பதைத் தனது தாரக மந்திரமாகக் கொண்டு இருப்பவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி.

கடந்த பல ஆண்டுகளாகவே ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் அவர் கூறுவதற்குக் காரணமே, மக்களின் மறதி மீது அவருக்கு இருக்கக் கூடிய அளவுகடந்த நம்பிக்கைதான்!

ஐ.நா. மனித உரிமை ஆணையம் நிறைவேற்றி யுள்ள தீர்மானத்தைப் பற்றி பேசுகையில், பழைய புழுத்துப்போன பொய்யைத் திரும்பவும் கூறி இருக்கிறார் கருணாநிதி.

‘ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை நான் மனம் திறந்து பேச வேண்டுமேயானால், சகோதர யுத்தம்தான் தமிழீழம் உருவாவதைத் தடுத்துவிட்டது என்பது என்னுடைய கருத்து. யார் பெரியவர், இதை சாதிக்கிற முயற்சிகளில் வெல்லக்கூடியவர் யார் என்பதை நிலைநிறுத்துவதற்காக விடுதலைப் போராளிகள் ஒருவருக்கொருவர் சுட்டுக்கொண்டு ஒற்றுமையைக் கெடுத்துக் கொண்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். போராளிகள் மாத்திரமல்ல போராளிகளுக்கும் இலங்கை அரசுக்கும் மற்றும் பக்கத்து நாட்டுத் தலைவர்களுக்கும் தொடர்பு கொள்ளக்கூடிய வாய்ப்பும் செல்வாக்கும் உள்ள அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் எல்லாம் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பத்மநாபா குழுவைச் சேர்ந்த 10 பேர் சென்னையில் ஒரே நாளில் கொல்லப்பட்டதையும் அறிவீர்கள். சகோதர யுத்தம் வேண்டாம் என்று நான் பலமுறை கெஞ்சிக் கேட்டுக்கொண்டும்கூட யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை’ என்று கூறி இருக்கிறார் கருணாநிதி.

2012-ம் ஆண்டில் இவ்வாறு புலம்புகிறவர், 1990-ம் ஆண்டு மே 8-ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் என்ன கூறினார்? இது, சட்டமன்றப் பதிவேட்டில் பதிவாகி உள்ளது. தேச விரோத நடவடிக்கைகளில் கருணாநிதி ஈடுபடுவதாக சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியபோது முதலமைச்சராக இருந்த கருணாநிதி, ‘மத்திய மாநில அரசுகளுக்கு இடையே பிளவு ஏற்படுத்த ‘ரா’ உளவுத்துறை தொடர்ந்து செயல்படுகிறது. இலங்கையில் உள்ள பல்வேறு போராளிக் குழுக்களிடையே பிளவும் மோதலும் ஏற்பட்டதற்கு ‘ரா’ உளவுத்துறையே காரணம்’ என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். இவ்வாறு, சகோதரச் சண்டைக்கு ‘ரா’ உளவுத் துறையே காரணம் என்று சட்டமன்றத்திலேயே குற்றம் சாட்டியவர், இப்போது மத்திய அரசின் கூட்டாளியாக இருப்பதால் ‘ரா’ உளவுத்துறையைப் பற்றி எதுவும் பேசாமல் போராளிகள் மீது பழியைச் சுமத்த முற்படுகிறார்.

அது மட்டும் அல்ல… 1984-ம் ஆண்டில் அனைத்துப் போராளி இயக்கங்களையும் ஒற்றுமைப் படுத்துவதற்கு அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். எடுத்துக்கொண்ட முயற்சியைத் திட்டமிட்டுச் சீர்குலைத்தது யார்? 1984-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழீழ விடுதலை அமைப்புகளை ஒன்றுபடுத்துவதற்காக அந்த அமைப்பின் தலைவர்களை, குறிப்பிட்ட நாளில் தம்மைச் சந்திக்குமாறு முதல்வர் எம்.ஜி.ஆர். பகிரங்க அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை தமிழ்நாட்டு நாளிதழ்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. ஆனால், இந்த அழைப்பு விடுக்கப்பட்ட மறுதினமே தி.மு.க. தலைவர் கருணாநிதி குறுக்குச்சால் ஓட்டினார். போராளிகளை சந்திக்க வருமாறு எம்.ஜி.ஆர். குறிப்பிட்ட தினத்துக்கு முந்தைய தினம் தம்மைச் சந்திக்குமாறு ஈழ விடுதலை அமைப்புகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். இதுவும் பத்திரிகைகளில் பரபரப்புடன் வெளியானது.

உண்மையிலேயே, போராளி இயக்கங்களை ஒன்று படுத்த வேண்டும் என இவர் நினைத்து இருந்தால், இதற்கு முன்பே இத்தகைய அழைப்பை விடுத்திருக்க வேண்டும். முதல்வர் எம்.ஜி.ஆர். அழைப்பு விடுத்த பிறகு, ஏட்டிக்குப் போட்டியாக இவர் ஓர் அழைப்பு விடுவதின் உள்நோக்கம் என்ன? ஒற்றுமையைச் சீர்குலைப்பதே என்பது வெள்ளிடை மலையாகும்.

கருணாநிதி விடுத்த அழைப்பை விடுதலைப் புலிகளும், பிளாட் இயக்கமும் ஏற்கவில்லை. ஏனென்றால், முதலில் அழைப்பு விடுத்தவர் எம்.ஜி.ஆர்.தான். கருணாநிதி அதற்குப் போட்டியாக இதைச் செய்கிறார் என்பது அவர்களுக்கு நன்கு புரிந்தது. எனவே, அவர்கள் செல்லவில்லை. மற்ற இயக்கங்கள் கருணாநிதியின் அழைப்பை ஏற்றுச் சென்றன. இதன் விளைவாக, முதலமைச்சர் மேற்கொள்ள இருந்த ஒற்றுமைக்கான முயற்சி திட்டமிட்டுச் சீர்குலைக்கப்பட்டது.

இதைச் செய்த கருணாநிதிதான் இப்போது சாத்தான் வேதம் ஓதுவதுபோல, சகோதரச் சண்டையைப் பற்றி நீலிக் கண்ணீர் வடிக்கிறார்!

Leave a Reply

Your email address will not be published.