இரசாயன ஆயுத அழிப்புத் தொடர்பில் சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத்தை அமெரிக்கா பாராட்டியுள்ளது.
இரசாயன ஆயுத உடன்படிக்கையை சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத்தின் அரசாங்கம் பின்பற்றுகின்றமை குறித்து பெருமை கொள்வதாக அமெரிக்கா இராஜங்கச் செயலாளர் ஜோன் கெரி கூறியுள்ளார்.
சிரியாவில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள இரசாயன ஆயுதங்களை அழிக்கும் நடவடிக்கைகளை தாம் ஆரம்பித்துள்ளதாக சர்வதேச கண்காணிப்பாளர்கள் கூறியதை அடுத்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்க – ரஷ்ய உடன்படிக்கையை தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டிருந்தது.
டமஸ்கஸ்சில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டதாக கூறப்படும் இரசாயன ஆயுதத் தாக்குலை தொடர்ந்து சர்வதேச ரீதியாக கண்டனம் வெளியிடப்பட்ட நிலையில், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
குறித்த பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் மனிதனின் நரம்பினை பாதிக்கும் சரின் என்ற வாயு பயன்படுத்தப்பட்டதை ஐ.நா கண்காணிப்பாளர்கள் உறுதிப்படுத்தியிருந்தனர்.
இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த தாக்குதலுக்கு சிரிய அரசாங்கமே பொறுப்பு என அமெரிக்கா மற்றும் அதன் மேற்குலக நட்பு நாடுகள் குற்றஞ்சாட்டியிருந்தன.
எனினும் இந்த தாக்குதலை எதிர்தரப்பு கிளர்ச்சியாளர்ளே நடத்தியதாக சிரிய அரசாங்கம் குறிப்பிட்டதுடன், ரஷ்யாவும் சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



















Leave a Reply