தெரிவுக்குழு மூலம் தீர்வினைத் திணிக்க முயற்சி – மு.கா!

தெரிவுக்குழு மூலம் தீர்வினைத் திணிக்க முயற்சி – மு.கா!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் முஸ்லிம் காங்கிரஸினதும் பங்குபற்றுதலின்றி நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினால் எட்டப்படும் எந்த முடிவுகளும் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையப் போவதில்லை என்று தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹஸன் அலி நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக அரசாங்கம் ஒரு தலைப்பட்சமான தீர்வினைத் திணிக்க முயற்சிக்கிறதென்றும், இவ்வாறான தீர்மானங்கள் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு உதவப் போவதில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கென தற்போது அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் ஒத்த கருத்தைக் கொண்டவர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். இவர்கள் ஊடாக தீர்வுகளைக் கண்டு அதனையே தேசியப் பிரச்சினையின் சிபார்சுகளாக முன்வைக்க அரசு முயற்சிக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் முஸ்லிம் காங்கிரஸினதும் பங்குபற்றுதலின்றி நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினால் எட்டப்படும் எந்த முடிவுகளும் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாக ஒருபோதும் அமையப் போவதில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இக் குழுவில் அங்கம் பெறுமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ள நிலையில் அதனை ஏற்றுக் கொண்டு அக் கட்சி பங்கேற்றாலும் அதன் சிபார்சுகள், கருத்துகள் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் இறுதி வடிவத்தில் உள்ளடக்கப்படுமா என்பது கூட சந்தேகமாகவேயுள்ளது.

ஏனெனில் மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட எவரையும் இந்த நாடாளுமன்றக் குழுவில் உள்வாங்கும் மனப்பாங்கு அரசாங்கத்திடம் இல்லை. மாற்றுக் கருத்துக்களையும் உள்வாங்கும் மன நிலை அரசாங்கத்திடம் இருந்திருந்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் அமைச்சர் திஸ்ஸ விதாரணவையும் அந்தக் குழுவில் அரசாங்கம் இணைத்திருக்க வேண்டும்.

இவ்வாறானதொரு நிலையில் ஒருதலைப்பட்சமான தீர்வுகளையே அரசாங்கம் முன்வைக்க முயற்சிக்கிறது. இதனை எமது கட்சி ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டாது என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.