அரசாங்கம் மோசமாக செயற்படுகின்றது என்பதை சர்வதேசம் உணர்ந்து விட்டது. அரசாங்கத்தை விடவும் தமிழ்
மக்களின் பேச்சுக்கே முன்னுரிமை கொடுக்கின்றமையானது ஜனாதிபதிக்குக் கிடைத்த மிகப்பெரிய தோல்வியே என்று நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் செய்த யுத்த குற்றங்களை தமிழ் மக்கள்
உணர்ந்ததனாலேயே வடக்கிலிருந்து அரசாங்கத்தை
விரட்டியுள்ளனர்.
இதை அரசாங்கம் நல்லதொரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் முக்கிய சர்வதேச நாடுகள் சில கலந்து கொள்ளாமையும் சர்வதேச நாடுகளிடமிருந்து நிதியுதவிகள் தடுக்கப்பட்டுள்ளமையும் இலங்கைக்கு பாரிய சிக்கலாகவே அமைந்துள்ளது.
குறிப்பாக இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்களே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டன.
ஐக்கிய நாடுகள் சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தாமைக்கான பின்விளைவுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் தற்போது அனுபவித்து வருகின்றது.
இன்று சர்வதேச நாடுகள் இலங்கை அரசாங்கத்தை விடவும் தமிழரின் குரலுக்கே முன்னுரிமை கொடுக்கின்றன.
குறிப்பாக இந்தியா, கனடா போன்ற நாடுகள் தமிழர்களின் நலனையே கருத்திற் கொண்டு செயற்படுகின்றன.
உலகில் எந்த நாட்டிலும் இல்லாத ஒரு விடயம் இலங்கையில் இடம்பெறுகின்றதென்றே குறிப்பிட வேண்டும்.
அதாவது அரசாங்கத்திடம் கேட்காது சிறுபான்மை மக்களிடம் அனுமதி கேட்கும் நிலைமை இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ளது. இது ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு மிகப் பெரியதொரு தோல்வியாகும்.
எல்லாவற்றுக்குமான இறுதி முடிவை அரசாங்கம் பொது நலவாய மாநாட்டின் பின்னர் பெற்றுக் கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.













Leave a Reply