உரிய நேரத்தில் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வடக்கிற்கு கிடைக்கப்பெறும் என வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத்தின் அடிப்படையில் உரிய நேரத்தில் காணி காவல்துறை அதிகாரங்கள் வட மாகாணசபைக்கு கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
போதியளவு ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வட மாகாணசபைக்கு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதிகாரத்தை பகிரத் தயாரற்ற நிலையில் மத்திய அரசாங்கம், வட மாகாணசபையின் ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் நோக்கிலேயே அரசாங்கம்; நகரசபைகள், பிரதேச சபைகள், மாகாணசயை வடக்கில் உருவாக்கியது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, நாட்டின் ஏனைய மாகாணசபைகளைப் போன்றே வட மாகாணசபையும் இயங்க சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அரசியல் சாசனத்தின் அடிப்படையில் மாகாணசபைகளுக்கு அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும், அந்தப் பொறுப்பிலிருந்து அரசாங்கம் தப்பித்துக்கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் உள்ள ஏனைய 7 மாகாணங்களுக்கும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் தேவைப்படாது இருக்கலாம் ஆனால் காணி சுவீகரிப்பு, பாதுகாப்பு கேள்விக்கிடமான நிiலில் உள்ள வடக்கு கிழக்கிற்கு குறித்த அதிகாரங்கள் அவசியமானது என வடக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு தேவையான உரித்துக்கள் ஏனைய மாகாணங்களுக்கு தேவைப்படாது இருக்கலாம். எனினும் காணி, பாதுகாப்பு ஆகியனவற்றை எடுக்கும் பொறுப்பு அந்தந்த மாகாணசபைகளின் நிலையினைக் கொண்டது. மாறாக எல்லா மாகாணங்களுக்கும் சமநிலை என கருத்துக் கொள்வது தவறாகும் எனவும் தெரிவித்தார்.
“வடக்கு மக்களின் பாதுகாப்பு கேள்விக்கிடமான நிலையில்” அதன்படி வடக்கில் இன்று காணிகள் சூறையாடப்படுகின்றன. மக்களின் பாதுகாப்பு கேள்விக்கிடமாக மாறியுள்ளது. இவற்றுக்கு முகம் கொடுக்கவே அரசியல் அமைப்பில் மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அவற்றை நாம் சட்டப்படி நடைமுறைப்படுத்தியுள்ளோம் என்றார்.
எனினும் மத்திய அரசு இவற்றைக் கருத்திற் கொண்டு வடக்கு மாகாண சபைக்கு அவற்றை பகிர்ந்தளிப்பார்கள் என நம்புகின்றேன். மேலும் 13 ஆவது திருத்தத்தின் கீழ் மத்திய அரசுக்கு பொதிய செல்வாக்கை கைவசம் வைத்துக் கொண்டே மேற்படி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எனவே அவற்றை வழங்குவதில் மத்திய அரசு தயக்கம் காட்டக் கூடாது. அவ்வாறு தயக்கம் காட்டினால் சிறுபான்மை மக்கள் தமது வாழ்க்கையினை சீரமைத்து செல்ல அரசு விரும்பவில்லை என்ற ஒரு கருத்தை உலகறியச் செய்துவிடும் என்றார்.