பயங்கரவாத புலனாய்வுப்பிரிவு பொலிஸாரினால் கடுமையாக சித்திரவதைக்குட்படுத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரனின் செயலாளரான பொன்னம்பலம் லட்சுமிகாந்தனை (பொன்.காந்தன்) சட்ட வைத்திய அதிகாரி முன் முன்னிலைப்படுத்தி சட்ட மருத்துவ அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்யும்படி கொழும்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி அஜித் பிரியந்த, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரான அருணாசலம் வேழமாலிகிதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரனின் செயலாளரான பொன்னம்பலம் லட்சுமிகாந்தன் ஆகியோர் சார்பில் நீதிமன்றில் ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா தனது வாதத்தை முன்வைக்கையில்;
2013 ஆம் ஆண்டு தை மாதம் 12 ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சிக் காரியாலயம் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரினால் சோதனையிடப்பட்ட வேளையில் பயங்கரவாத புலனாய்வு பிரிவுப் பொலிசார் வெடிமருந்து உள்ளதெனக் கூறி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் சட்டரீதியற்ற முறையில் மாவட்ட அமைப்பாளரான அருணாசலம் வேலமாலிதனை கைதுசெய்தனர்
பயங்கரவாத புலனாய்வு பிரிவுப் பொலிஸாரினால் காரியாலயம் சோதனையிடப்பட்ட வேளையில் பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரனின் செயலாளரான பொன்னம்பலம் லட்சுமிகாந்தன் காரியாலயத்திலேயே கடமையில் இருந்தார்.
காரியாலயத்தை சோதனையிட்ட வே ளையில் காரியாலயத்தில் கைப்பற்றப்பட்டதாக பொலிஸாரினால் கூறப்படும் கையளவு வெடிமருந்து, ஆணுறைகள், ஆபாசக் குறுந்தகடுகளை பொன்னம்பலம் லட்சுமிகாந்தனது கையில் கொடுத்து புகைப்படங்கள் எடுத்த பொலிஸார் இந்த வழக்கின் 5ஆம் சந்தேக நபரான லட்சுமிகாந்தனை கைது செய்யவில்லை.
2013 ஆண்டு தை மாதம் 16ஆம் திகதி பொன்னம்பலம் லட்சுமிகாந்தன் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரினால் தனது உயிருக்கு ஆபத்து என பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்தமையால் ஆத்திரம் அடைந்த பொலிஸார் பொன்னம்பலம் லட்சுமிகாந்தனை கைது செய்து தடுத்து வைத்து சித்திரவதை செய்துள்ளனர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் தன்னை கடுமையாக தாக்கி சித்திரவதை செய்ததாகவும் அதனால் தனது உடலில் பலகாயங்கள் உள்ளதாகவும் பொன்னம்பலம் லட்சுமிகாந்தன் எனக்கு அறிவித்துள்ளார்.
இதனால், இந்த வழக்கின் 5 ஆம் சந்தேக நபரான லட்சுமிகாந்தனை சட்ட வைத்திய அதிகாரி முன் முன்னிலைப்படுத்தி சட்ட மருத்துவ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.
இதனையடுத்து, 5 ஆம் சந்தேக நபரான லட்சுமிகாந்தனை சட்ட வைத்திய அதிகாரி முன் முன்னிலைப்படுத்தி சட்ட மருத்துவ அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்யும்படி கொழும்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி அஜித் பிரியந்த, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு மேலதிக விசாரணைகளை நவம்பர் மாதம் 12ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்