அமெரிக்காவின் நாடாளுமன்ற வளாகத்தில் முதன்முறையாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது.
அமெரிக்க நாடாளுமன்ற இரு அவைகளின் முக்கிய உறுப்பினர்கள், சிறப்பு மிக்க இந்திய அமெரிக்கர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று புதன்கிழமை ஒன்றுகூடி பாரம்பரிய தீபமேற்றி தீபாவளியை கொண்டாடினர்.
இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிவப்புத் திலகமிட்டு, மலர்மாலை அணிவித்து, பொன்னாடை போற்றி வரவேற்கப்பட்டனர்.
இந்தியா மற்றும் இந்திய அமெரிக்கர்களுக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோ க்ரோலி மற்றும் பீட்டர் ரோஸ்காம் ஆகியோரால் இந்தக் கொண்டாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் மூலமாக இந்திய-அமெரிக்க உறவின் முக்கியத்துவம் முன்னிலைப்படுத்தப்பட்டது.
இந்தக் கொண்டாட்டத்தில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நிருபமா ராவ், ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் நான்ஸி பெலோசி, வெளியுறவுக் குழுவின் தலைவர் எட் ராய்ஸ், அமெரிக்க நாடாளுமன்றத்தின் முதல் ஹிந்து உறுப்பினர் துளசி கப்பார்டு, ஜனநாயகக் கட்சியின் ஒரே இந்திய அமெரிக்கர் அமி பேரா, தீபாவளி அஞ்சல்தலை வெளியிடுவதற்காக பிரசாரம் செய்த கரோலின் பி மலோனி, வெளியுறவுக் குழுவின் உறுப்பினர் எலியாட் ஏஞ்சல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.