இலங்கையை சர்வதேச மட்டத்தில் அபகீர்த்திக்கு உள்ளாக்கும் நோக்கத்துடனேயே சனல் 04 நிறுவனம் மீண்டும் ஒருமுறை காணொளிக் காட்சிகளை வெளியிட்டுள்ளது. இதனை இலங்கை அரசாங்கம் கணக்கில் எடுக்கவேயில்லை. சனல் 4 நிறுவனம் மீண்டும் ஒருமுறை தோல்விகாணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடுகளை இலங்கை முன்னெடுக்கும்போது இவ்வாறு காணொளிக் காட்சிகளை வெளியிட்டு இலங்கையை அபகீர்த்திக்கு உட்படுத்துவது சனல் 04 நிறுவனத்தின் வழமையாகிவிட்டது. எனவே அதனை நாம் கவனத்தில் கொள்ளவேயில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் சர்வதேச மட்டத்தில் புலி ஆதரவு புலம் பெயர் மக்களின் செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த சவாலை எதிர்கொள்ள அரசாஙகம் தயாராகவே இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி அறிவிப்பாளரும் கலைஞருமான இசைப்பிரியா உயிருடன் பிடிபடும் காட்சியைக்கொண்ட புதிய காணொளியை சனல் 4 நிறுவனம் வெளியிட்டுள்ளமை தொடர்பில் கருத்துக் கூறுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில் சனல் 4 நிறுவனம் மீண்டும் ஒருமுறை இலங்கை அரசாங்கத்தை அபகீர்த்திக்கு உட்படுத்தும் முயற்சியில் வீடியோக் காட்சியை வெளியிட்டுள்ளது. இதனை எமது அரசாங்கம் கணக்கில் எடுக்கவேயில்லை.
காரணம் சனல் 4 நிறுவனமானது பொய்யான விடயங்களையே இவ்வாறு வெளியிடும் என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது. சர்வதேசத்துக்கும் இந்த விடயம் தெரிந்துவிட்டது. எனவே சனல் 4 நிறுவனத்தின் இந்த தோல்வியடையும் முயற்சி குறித்து நாங்கள் அலட்டிக்கொள்ளவில்லை. இந்த நிறுவனத்தின் பணிப்பாளர் கெலும் மெக்கரே பொதுநலவாய மாநாட்டின் செய்தி சேகரிப்புக்கு வருவதற்கு அனுமதி வழங்கவும் நாங்கள் தயாராகியுள்ளோம்.
ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வுகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை அமர்வுகள் நடைபெறும்போதும் பிரித்தானியாவில் முக்கி்யமாக ஏதாவது நிகழ்வுகள் இடம்பெற்றாலும் சனல் 4 நிறுவனம் இவ்வாறு வீடியோக் காட்சிகளை வெளியிடுவது வழமையாகிவிட்டது.
தற்போது இலங்கையில் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் இந்த வீடியோக் காட்சியை முன்வைத்துள்ளனர்.
எனினும் அந்த நிறுவனத்தின் இந்த முயற்சியானது தற்போது பெறுமதியற்றதாகிவிட்டது. பொய்யான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுக்கும்போது இந்த நிலை ஏற்படும்.
நான் அந்த வீடியோக் காட்சியை பார்வையிடவுமில்லை. பார்க்கவேண்டிய அவசியமுமில்லை. காரணம் சனல் 4 நிறுவனம் தொடர்ந்து பொய்யான விடயங்களையே வெளியிட்டுவருகின்றது. எனவே அது குறித்து நாம் கவனம் செலுத்தவேண்டியதில்லை.
அதாவது இலங்கையில் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் சர்வதேச மட்டத்தில் புலி ஆதரவு புலம் பெயர் மக்களின் செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த சவாலை எதிர்கொள்ள அரசாஙகம் தயாராகவே இருக்கின்றது என்றார்.