தமிழினப் படுகொலையாளி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் சிங்கள தேசத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்று பிரித்தானியப் பிரதமரை வலியுறுத்தி அவரது வாசத்தலம் முன்பாக குருதியை உறைய வைக்கும் கடும் குளிரில் பட்டினிப் போரை சுப்ரமணியம் பரமேஸ்வரன் தொடங்கியுள்ளார்.
இன்று மாலை 6:25 மணிக்கு இலண்டனில் உள்ள பிரித்தானியப் பிரதமரின் வாசத்தல முன்றலில் மாவீரர்களுக்கும், மானச்சாவெய்திய மக்களுக்கும் அகவணக்கம் செலுத்தி சுடரேற்றப்பட்டதை தொடர்ந்து தனது உண்ணாநிலைக் கவனயீர்ப்புப் போராட்டத்தை பரமேஸ்வரன் ஆரம்பித்தார்.
கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறும் இடத்தில் கூடாரம் அமைப்பதற்கு இதுவரை அனுமதியளிக்கப்படாத நிலையில் கடும் குளிருக்கிடையே வீதியோர நடைபாதையில் அமர்ந்திருந்தவாறு தனது பட்டினிப் போராட்டத்தை பரமேஸ்வரன் முன்னெடுக்கின்றார்.
பரமேஸ்வரனின் இப்போராட்டத்திற்கு உறுதுணையாக பிரித்தானியப் பிரதமரின் வாசத்தலம் நோக்கி அணிதிரளுமாறு அனைத்துப் புலம்பெயர்வாழ் தமிழீழ உறவுகளையும் உரிமையுடன் ஊடக இல்லம் கேட்டுக் கொள்கின்றது.