போர் என்றால் போர். சமாதானம் என்றால் சமாதானம். தமிழர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை

போர் என்றால் போர். சமாதானம் என்றால் சமாதானம். தமிழர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை

12.04.1984: கண்டியில் உள்ள சிறீலங்கா அதிபரின் வாசத்தலத்தில் செய்தியாளர் மாநாடு நடைபெறுகின்றது. ‘போர் என்றால் போர். சமாதானம் என்றால் சமாதானம். தமிழர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை.

David-Cameron

அவர்களை நான் பட்டினி போட்டால் சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்’ என்று பகிரங்கமாக வெளிநாட்டு ஊடகங்களுக்குக் கருத்துக்கூறி தமிழ் மக்கள் மீது கறுப்பு யூலை இனப்படுகொலையை அரங்கேற்றிய சிங்கள அதிபர் ஜுனியஸ் றிச்சார்ட் ஜெயவர்த்தனா அருகில் அமர்ந்திருக்க செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் அப்போதைய பிரித்தானியப் பிரதமர் மார்கிரட் தட்சர். விக்ரோறியா நீர்த்தேக்கத்தைத் திறந்து வைத்த வெற்றிக்களிப்பில் அமர்ந்திருந்த தட்சர் அவர்களை நோக்கித் திடீரென கேள்விக் கணையன்று வீசப்படுகின்றது,

“கேள்வி:- பிரதம மந்திரி அவர்களே, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணுமாறு பிரித்தானியா உட்பட உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்ற பொழுதும் வன்செயல்களைப் பயங்கரவாதிகள் நிறுத்தும்வரை அரசியல் தீர்வு பற்றிப் பேசப் போவதில்லை என்று சிறீலங்கா அரசாங்கம் கூறி வருகின்றது. வட அயர்லாந்தில் நீண்ட எதிர்ப்புரட்சிப் போராட்டத்தில் ஈடுபட்ட தேசத்தின் தலைவர் என்ற வகையில் சிறீலங்காவின் தற்போதைய நிலைப்பாடு பற்றிய உங்களின் கருத்து என்ன?

பதில்:- தமிழ் மக்களின் பிரச்சினை சிறீலங்கா அரசாங்கத்தின் பிரச்சினை. பயங்கரவாதத்தைப் பற்றிய எனது பார்வையில் எந்த முரண்பாடுகளும் இல்லை: இருக்கப் போவதுமில்லை. பயங்கரவாதம் வெற்றி பெறுவதாக இருக்கக்கூடாது. அவ்வாறு நடைபெற்றால் அது சனநாயகத்தின் முற்றுப்புள்ளியாக இருக்கும். சிறீலங்காவில் சனநாயகம் நிலவுகின்றது என்ற வகையில் பிரித்தானியாவில் நடைபெறுவது போன்று சனநாயக வழியிலேயே பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் – அதிலும் சனநாயகத்தில் நம்பிக்கை கொள்பவர்களால் அது தீர்க்கப்பட வேண்டும்.”

பிரித்தானிய வரலாற்றில் இரும்புப் பெண் என்று அறியப்பட்ட தட்சரின் இந்த அறிவித்தல் அன்று தமிழ் மக்களை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தவில்லை. தனது ஆளுகைக்கு உட்பட்ட சனல் தீவுத் தொகுதியில் தலைமையகம் அமைத்து இயங்கிய ‘கினி மினி’ தனியார் இராணுவ நிறுவனம் ஊடாக ஜெயவர்த்தனாவின் ஆயுதப் படைகளுக்கு படைக்கல ஆளணி உதவிகளை வழங்கி வந்த பிரித்தானியாவின் அப்போதைய பிரதமரின் வாயில் இருந்து உதிர்ந்த இந்த வார்த்தைகளையிட்டு எவரும் அலட்டிக் கொள்ளவுமில்லை. அப்பொழுது சிறீலங்கா அரசிடம் வலுவான வான்படை இருக்கவில்லை. ஆனாலும் அதனையிட்டு ஜெயவர்த்தனா கவலையடையவில்லை.

ஏனென்றால் சிறீலங்கா வான்படைக்கு தேவையான வானோடிகளை ‘கினி மினி’ நிறுவனம் தாராளமாக வழங்கிக் கொண்டிருந்தது. இவ்வாறு சிறீலங்கா வான்படையில் கூலிக்கு மாரடித்த ‘கினி மினி’ நிறுவனத்தின் வானோடிகள் அனைவரும் பிரித்தானிய வான்படையில் கடமையாற்றியவர்கள். ஆப்கானிஸ்தான், ஈரான், நிக்கராகுவா ஆகிய நாடுகளில் அக்காலப் பகுதியில் பிரித்தானியா மேற்கொண்ட இரகசிய நடவடிக்கைகளில் கலந்து கொண்டவர்கள்.

இவ்வாறு தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்கு ஜெயவர்த்தனாவின் ஆயுதப் படைகளுக்குப் பிரித்தானியா உதவிபுரிந்து வந்த நிலையில் அந்நாட்டின் பிரதமரின் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் அப்பொழுது தமிழர்களால் எதிர்பார்க்கப்பட்டவைதான்.

ஆனால் இன்று எல்லாமே தலைகீழாகி விட்டது. ‘தமிழ் மக்களின் பிரச்சினை சிறீலங்கா அரசாங்கத்தின் பிரச்சினை’ என்று தட்சர் கூறி முப்பது ஆண்டுகள் நெருங்கும் நிலையில் அவரது முதிசத்தைத் தாங்கி நிற்கும் பிரித்தானியாவின் பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்துவிட்டுச் செய்தியாளர்களைச் சந்திக்கும் பொழுது ‘தமிழர்களின் குரல் உலகெங்கும் ஒலிக்க வேண்டும் என்பதற்காகவே நான் யாழ்ப்பாணம் சென்றேன்’ என்று அறிவித்தது தமிழ் மக்களை நெகிழ வைத்து ஆசுவாசப்படுத்தும் அறிவிப்பாகவே அமைந்துள்ளது,

இருபத்தோராம் நூற்றாண்டின் வரலாற்றில் மிகப் பெரும் இனப்படுகொலையாளியாகத் திகழும் மகிந்த ராஜபக்சவிற்கு கைலாகு கொடுத்து அவரது தமிழின அழிப்பு நடவடிக்கைகளுக்கு இராசரீக அங்கீகாரம் வழங்கும் வகையிலேயே தனது கொழும்புப் பயணத்தைக் கமரூன் மேற்கொள்வார் என்ற அச்சம் அனைவருக்கும் இருந்தது. அதுவும் தட்சரின் வழிவந்த பிரித்தானியாவின் மரபுவாதக் கட்சியின் தலைவர் என்ற வகையில் தட்சரின் வழியிலேயே தமிழ் மக்களின் பிரச்சினையையும் கமரூன் கையாள்வார் என்றே அனைவரும் எண்ணத் தலைப்பட்டனர்.

அந்த வகையில் கமரூனின் யாழ்ப்பாணப் பயணமும் ஒரு அரசியல் பித்தலாட்டமாகவே அமையும் என்றே அனைவரும் அச்சம் கொண்டனர். ஆனால் அனைவரின் கணிப்புக்களையும் தவறாக்கித் தமிழர்களின் குரலாக யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் கமரூன் ஒலித்துள்ளார். எந்தவொரு மேற்குலகத் தலைவரும் செய்யத் துணியாத அரும்பெரும் செய்கையாக யாழ்ப்பாணத்தில் உள்ள ஏதிலிகள் முகாமிற்குப் பயணம் செய்து அங்குள்ள மக்களை சந்தித்து உரையாடினார் கமரூன். பிரித்தானிய ஊடகவியலாளர்கள் சூழ்ந்து நிற்க குடிசைகளுக்குள் நுழைந்து மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்டார். இறுதிப் போரில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான சுயாதீன விசாரணைகளை விரைவாக சிறீலங்கா அரசாங்கம் ஆரம்பிக்கத் தவறினால் பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணைக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்குப் பிரித்தானியா தள்ளப்படும் என்று அங்கிருந்தவாறே எச்சரித்தார்.

அங்கிருந்து உடனடியாகக் கொழும்பு திரும்பி மகிந்தரை சந்தித்து தனது எச்சரிக்கையை அதிகாரபூர்வமாக விடுத்தார். மறுநாள் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் சுயாதீன விசாரணைகளை சிறீலங்கா அரசாங்கம் மேற்கொள்வதற்கு 2014 மார்ச் மாதம் வரை காலக்கெடு விதித்தார். அதன் பின்னர் பொதுநலவாய மாநாட்டை இடைநடுவில் முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பினார்.

அடுத்தடுத்துப் பிரித்தானியப் பிரதமர் மேற்கொண்ட இவ் அதிரடி நடவடிக்கைகளும், சிங்களத்தின் வயிற்றில் புளியைக் கரைக்கும் வகையில் அவர் விடுத்த அறிவிப்புக்களும் நம்பிக்கையிழந்து கிடந்த தமிழர்களுக்கு புத்துணர்ச்சியை அளித்துள்ளன. கருணாநிதியின் தந்தி அனுப்பும் ‘போராட்டத்திற்கு’ சளைக்காது தீர்மானம் நிறைவேற்றும் ஜெயலலிதாவின் முகத்திரை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் கிழிந்து கிடக்கும் நிலையில் எமக்காகக் குரல்கொடுப்பதற்கு எவருமே இல்லையா? என்று தமிழர்கள் ஏங்கித் தவித்த ஓரிரு நாட்களிலேயே தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக கமரூன் மாறியுள்ளார்.

கமரூன் விடுத்த கோரிக்கையை ஏற்று உள்நாட்டில் சுயாதீன போர்க்குற்ற விசாரணைகளை மகிந்தர் மேற்கொள்ளப் போவதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். அவ்வாறு சுயாதீன விசாரணைகள் நடைபெறுவதற்கு இடமளித்தால் தானும், தனது குடும்பமும் கூண்டோடு அஞ்ஞாதவாசம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்பது மகிந்தருக்குத் தெரியும். தனக்குப் பிறகு சிங்கள தேசத்தின் ஆட்சிக் கட்டிலின் முதிசத்தைத் தனது புதல்வனிடம் கையளிக்கும் கனவு அத்தோடு பகற்கனவாக மாறிவிடும் என்பதும் மகிந்தருக்குத் தெரியும்,

அதே நேரத்தில் ஈழத்தீவில் இன்னுமொரு ஆயுதப் போராட்டம் வெடிப்பதை தடுப்பதாயினும், மகிந்தரை ஆட்சிக் கட்டிலிலிருந்து அகற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதும் மேற்குலகிற்கு நன்கு தெரியும். தவிர அரச மயப்படுத்தப்பட்ட பொருண்மியக் கொள்கைகளை அமுல்படுத்தும் மகிந்தரை ஆட்சிப்பீடத்திலிருந்து அகற்றுவதன் ஊடாகவே ஈழத்தீவில் சுதந்திரமாகத் தமது முதலீட்டாளர்கள் செயற்படுவதற்கான சூழலைத் தோற்றுவிக்க முடியும் என்பதும் மேற்குலகிற்குத் தெரியும்.

இதுதான் அரசியல் யதார்த்தம். இவ்வாறான நிலையில் பிரித்தானியப் பிரதமர் எச்சரித்தது போன்று பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணை நடைபெறுவதை இனியும் மகிந்தரால் தடுத்து நிறுத்த முடியாது. போர்க்குற்ற விசாரணை என்ற முனையில் இருந்து தொடங்கப் போகும் மேற்குலகின் இந்த இராசரீக யுத்தம் இனவழிப்பு என்ற முனையிலேயே முடிவுக்கு வரும். போர்க்குற்றவாளி என்ற இன்றைய நிலையில் இருந்து இனப்படுகொலையாளி என்ற நிலைக்கு மகிந்தர் மாறுவதற்கு இன்னும் பல ஆண்டுகள் எடுத்தாலும் ஈற்றில் தமிழர்களுக்கு நீதி கிட்டுவது உறுதி.

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் நிகழ்ந்துள்ள இந்த அரசியல் திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த பெருமை மாவீரர்களுக்கே உரித்தானது. சிங்களம் மீது மேற்குலகம் தொடுக்கப் போகும் இந்த இராசரீக யுத்தத்தின் ஊடாக தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் இனி ஏற்படவுள்ள மாற்றங்களுக்கும் மாவீரர்களே உரித்தானவர்கள். “சத்தியத்தின் சாட்சியாக நின்று மாவீரர்களின் தியாக வரலாறு எமக்கு வழிகாட்டும். அந்தச் சத்தியத்தின் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோம் என்பது உறுதி” என்று 2002 ஆம் ஆண்டு தனது மாவீரர் நாள் உரையில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தெரிவித்தன் அர்த்தபரிமாணம் இதுதான்.

-சேரமான்

 

Leave a Reply

Your email address will not be published.