Search

என்றும் எம் தளபதியே! – ச.ச.முத்து.

C

முழு நிலமும் இருள் சூழ்ந்து கிடக்கும் ஒரு
துயரப்பொழுது இது.
ஒரு பிடி மண்கூட எம்மிடம் இல்லை.
அனைத்தும் ஆதிக்கப்பிடிக்குள் அகப்பட்டு நெரிபடுது.

மீண்டும் கூனிக்கிடக்கும் ஒரு
பொழுதில் உன் நினைவுநாள் தளபதியே!
சூரியன் கைபிடித்து நடந்தெழுந்த
அக்கினிக்குஞ்சே,
கடலுக்குள் நின்றபடியே தீக்குளித்த பெருந்தீயே
நீ போனதிசை பார்த்து இன்னும்
ஒரு தேசம் எதிர்பார்த்து நிற்கிறதே!

எத்தனை வரிகள் எழுதினும் உன் ஆற்றல்
அத்தனையும் அளந்திடுதல் முடியுமா கிட்டு!
சத்தியம் வரித்துக் களத்தினில் நின்றவன் நீ
சுதந்திரம் அன்றி வேறெதுவும் தேடாத
நித்தியத்தளபதியே!

முற்றுகைக்குள் எம்மினத்தை வைத்திருந்த
எதிரியையே முற்றுகைக்குள் சுற்றிவைக்கத்
தெரிந்த யுத்த வித்தகன் நீயேதான்.!
நூற்றாண்டு நூற்றாண்டாய் இழந்திருந்த
அன்னை மண்ணை முதன்முதலாய்
மீட்ட தளபதியே!

எத்தனை ஆற்றல், எத்துணை ஆளுமை
அத்தனையின் மொத்தமுமே நீதானே தோழா!
எப்படித்தொலைத்தோம் உன்னை
எத்தனை கனவுடன் அலைகடல் ஏறி
அன்னை மண்காண ஆவலுடன் வந்திருப்பாய்..
ஆழக்கடல் நடுவே உன்னை ஆதிக்கம் மறித்து
கேள்விக்கு அழைத்தது. காலுக்குள் வாவென்று
கூவியது.

பெரிய நாடென்றென்ற திமிருடன்
பிடரி சிலிர்க்க நின்றது ஆதிக்கம்.
நீ தீமூட்டி எரித்த கப்பலின் தீ எழுந்து
ஆதிக்க முகத்தில் கரிபூசி அப்பியது.
முப்பத்துமூன்று வயதுக்குள் முடிந்ததென்று
மூடிவிடமுடியா வரலாறு நீ.
இப்போதும் இனி எப்போதும் எங்களின்
தளபதியே நீதான்.

கொஞ்சம் வீரரும் குறைவான ஆயுதமும்
கையிலிருந்த போதிலேயே நீ
போர்க்களம் ஆடிய விந்தை பெரிது தோழா!
நித்தம் ஏதேனும் முகாமில் இருந்து
வெளியேற துடிக்கும் கொலைகார படைக்கு
நீ நிற்கும் சேதி வந்துவிட்டால்
மொத்தமும் பொத்தி முகாமுக்குள்
சுருண்டு கிடந்தன பேரினத்துப்படைகள்.

களமாடி வந்துவிட்டால் ஓய்ந்திருக்கும்
பொழுதுனக்கு இல்லை நண்பனே.
உன்னை மக்களும் மக்களை நீயும்
புரிந்து கொண்டதைப்போல ஒரு
உறவு இனி எப்போதும் இல்லை.
அவர்களுக்கு நீ அவர்களின் வீட்டு
செல்லப் பிள்ளை!

அன்புமகனாய், ஆசை சகோதரனாய்
துயர்துடைக்கும் தோழனாய்
எல்லாவற்றிலும் மேலாக
அந்தச் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு
கிட்டுமாமாவாக எத்தனை
வடிவமடா உனக்கு!
உன் ஆளுமையின் வேர்கள்
அன்னை மண் தாண்டியும்
பேரினத்து தேசத்துள்ளும்,
ஆதிக்க அரண்களுக்குள்ளும்
ஆழமாய் பாய்ந்திருந்தன.

கோலியாத்தின் படைகளை
முகாம்களுக்குள் முடக்கிவைத்த
தாவீது யாரென்று பார்க்கும்
ஆவலே அனைவருள்ளும்
ஓங்கி நின்றது.
அவர்களுக்கு புரிந்திருக்க ஞாயமில்லை.
உன்னில் படிந்திருந்த வீரமும் ஆளுமையும்
உன் தோற்றத்திலும் நீ தூக்கித்திரியும்
‘மக்னம் துப்பாக்கியிலும்’ இல்லையென்று.

பல நூற்றாண்டுகளாய் விடுதலைதேடிய
ஒரு இனத்தின் மொத்தக்கனவையும்
காவித்திரிந்த போர்க்கள வீரன்நீ.
அதுவே உன்னுள் ஆளுமையாயும்
அதைவிடப் பெரிய ஆற்றலாயும்
விரிந்ததென்பதே உன் வீரம்.
காலம் அழிக்கமுடியாத
பெரும் காலப்பதிவு நீ.
உன் காலடிச்சுவடுகள் என்றும்
தேசத்து மண்ணிலும்
மாந்தர் நெஞ்சுள்ளும்
அழியாமல் படிந்திருக்கும்.

இன்னும் ஒரு பொழுதில் எழும்
ஏதேனும் தீப்பொறிக்கு
உன் வரலாறே வழிகாட்டியாய்
இருக்கும்.
எப்போதும் அலையாடும் அந்த
கடலின்மீது விடுதலைக்கான உன்
இறுதிக்குரல் எப்போதும்
தவழ்ந்திருக்கும்.
அந்த இறுதிப்பொழுதிலும்
உறுதி குலையாமல் உன்னுடன்
நின்றிருந்த உன் தோழர்கள்
அனைவரையும் எப்போதும்
நினைத்திருப்போம்.

தோழர்களே,
இழந்தது அனைத்தும்
மீண்டும் ஒரு பொழுதில்
எம் இனம் மீளப்பெறும் ஒரு
பொழுது உருவாகும் ஒரு நாளில்.

Layout 1
Leave a Reply

Your email address will not be published.