சிங்கக்கொடியை ஏற்றமாட்டேன் என்று வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மறுத்த சம்பவம் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது

சிங்கக்கொடியை ஏற்றமாட்டேன் என்று வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மறுத்த சம்பவம் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது

சிங்கக்கொடியை ஏற்றமாட்டேன் என்று வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மறுத்த சம்பவம் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு ஒலுமடு தமிழ்வித்தியாலய இல்லவிளையாட்டுப் போட்டிக்கு பிரதம விருந்தினராக அழைக்கப்பட்ட ரவிகரனை , இலங்கையின் தேசியக்கொடியை ஏற்றி வைக்க அழைத்தபோது , ரவிகரன் அதை வெளிப்படையாக மறுத்த நிகழ்வு அங்கு கூடியிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது ,
முல்லைத்தீவு ஒலுமடு தமிழ் வித்தியாலய இல்ல விளையாட்டுப்போட்டி , பாடசாலை அதிபர் திரு,சர்வேஸ்வரன் அவர்களின் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. வலயக்கல்வித் திணைக்கள உதவிப் பணிப்பாளர்கள் சிலரும் அப்பகுதி கிராம அலுவலர், அயல் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் , மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பெருந்தொகையானோர் இதில் கலந்து கொண்டிருந்தனர். பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கலந்து சிறப்பித்தார்.
பாடசாலை சமூகத்தால் விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டு விளையாட்டு மைதானத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மங்கள விளக்கேற்றல் முடிந்ததும் தேசியக்கொடியினை பிரதம விருந்தினர் ரவிகரன் அவர்களை ஏற்றி வைக்க, அறிவிப்பாளர் அறிவித்தபோது , ரவிகரன் அதை மறுத்ததாக தெரிய வருகிறது. இதையடுத்து , பிரதம விருந்தினர் அவர்கள் ஏற்றுவது தான் முறையென சிலரால் அருகில் தெரிவிக்கப்பட்டபோதும் ரவிகரன் மறுத்துவிட்டார். தான் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சிங்கக்கொடி ஏற்ற மாட்டேன் என்று கூறிவிட்டார். படையினர் ,பொதுமக்கள் என பலர் குழுமியிருந்த அந்த நிகழ்வில் , ரவிகரனின் மறுப்பு , பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இதையடுத்து அங்கு வந்திருந்த படை அதிகாரி ஒருவர் கொடி ஏற்றினார்.
அதன் பின்னர் நடந்த நிகழ்வுகளில், அதிபர் தனதுரையில் தமது பாடசாலையின் கட்டடம் விளையாட்டு மைதானம் ஆகியவற்றின் புனரமைப்பு அவசியம் பற்றி வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார். ரவிகரன் தனதுரையில் உரிய தேவைகள் பற்றிய விடயங்களில் கவனம் செலுத்தி சம்பந்தப்பட்டவர்களின் கவனத்துக்கு கொண்டு வருவதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.