முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. அந்த மரண தண்டனையை குறைக்க கோரி 3 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார்கள். இதுவரை காலமும் ஜனாதிபதி பதவிக்கு வந்தவர்கள் அனைவரும் ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கருணை மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கடந்த 13 ஆண்டுகளாக அந்த கருணை மனுக்கள் கிடப்பில் போடப்பட்டிருந்தன.
இந்த நிலையில் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க தாமதம் ஏற்பட்டதாலும், கடந்த 23 ஆண்டுகளாக சிறையில் இருப்பதாலும் தங்களது மரண தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என்று முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் உச்ச நீதிமன்றில் மனுதாக்கல் செய்தனர். அவர்கள் தங்கள் மனுவில், “ஏற்கனவே கருணை மனு மீது முடிவு எடுக்க தாமதம் ஏற்பட்டதால் 15 பேர் தூக்கு தண்டனை இரத்து செய்யப்பட்டுள்ளது. அதே நடைமுறையில் தங்கள் தண்டனையையும் குறைக்க வேண்டும்” என்று கூறி இருந்தனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் 3 பேரின் மனுக்கள் மீதான விசாரணையை நடத்தியது. அப்போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் குலாம் இ.வாகனவதி, சாந்தன், முருகன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை இரத்து செய்யக்கூடாது என்று வாதிட்டார். ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அவரது வாதத்தை ஏற்கவில்லை என்பது இன்று உறுதியானது.
இந்த வழக்கில் பல முக்கிய விடையங்களை தொகுத்து, அவற்றை ஆவணப்படுத்திய பெருமை ஐயா நெடுமாறன் மற்றும் அண்ணன் வைகோ அவர்களையே சாரும். அவர்கள் நீண்ட நாட்களாக இவர்களில் விடுதலைக்காக போராடி வந்துள்ளார்கள். தற்போது கூட இந்தியாவில் விடுதலைப் புலிகள் மேல் உள்ள தடையை அகற்றவேண்டும் என்று போராடிவருபவர்களும் அவர்கள்தான் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.