Search

டென்மார்க் வல்வை ஒன்றியத்தின் ஒன்றுகூடலும் ,புதிய நிர்வாகமும்

டென்மார்க் வல்வை ஒன்றியத்தின் ஒன்றுகூடலும் புதிய நிர்வாகமும்

டென்மார்க் வல்வை ஒன்றியத்தின் 14 வது ஆண்டு நிறைவும், ஒன்றுகூடலும் கடந்த 15.03.2014 அன்று மாலை 16.00 மணிக்கு கிறீன்ஸ்ரட் நகரத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அமைதி வணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாயின.
தலைவர் உரையைத் தொடர்ந்து வரவேற்புரை இடம் பெற்றது, அடுத்து புதிய நிர்வாக சபை தேர்வானது.
தலைவராக திரு. தெய்வேந்திரன் வடிவேலு தேர்வானார்.
செயலாளராக திரு. ராஜலிங்கமும் (அலெக்ஸ்), பொருளாளராக அ. பரணீதரனும் தேர்வானார்கள்.
இவர்களுடன் மேலும் இருவரை உள்ளடக்கி ஐந்துபேரைக் கொண்ட நிர்வாகம் தேர்வானது.
அன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வுகளில் முதலாவதாக எவ்வாறு வல்வை மக்களை பிளவுகள் இன்றி ஒற்றுமைப்படுத்துவது, வல்வையர் என்ற கோணத்தில் ஒன்றிணைப்பது என்ற கருத்தரங்கு நடைபெற்றது.
நாம் புலம் பெயர்ந்து கால் நூற்றாண்டுகள் கடந்துவிட்டன.
வல்வை மக்கள் வல்வையில் வாழ்வதைப்போல வெளிநாடுகளில் வாழ முடியாது, பல்வேறு நாடுகளில், நாடுகளின் நகரங்களில் பிளவுபட்டு, அவ்வப்பகுதி மக்களோடு கரைந்து போகும் நிலையே யதார்த்தமாக உள்ளது.
இதனால் வல்வை என்ற தலைப்பில் உறவுகளை பேண முடியவில்லை, காலத்திற்கேற்ப நடைபெறும் மாறுதல்களை உணர்ந்து புதிய தளத்தில் ஒரு கட்டமைவை உருவாக்காவிட்டால் இந்த உறவுகளை அடுத்த தலைமுறையில் பேண முடியாது.
வல்வை என்ற தலைப்பில் ஒன்றுகூடல் நடக்கும் போது நமது அரசியல் கொள்கைகள், சமயக் கொள்கைகள், கொடுக்கல் வாங்கல்கள், கழக மோதல்கள், பிரதேச பிரச்சனைகள் யாவும் அதற்கு வெளியே வைக்கப்பட வேண்டும்.
நாமாக தேடிக்கொண்ட வரித்துக்கொண்ட விவகாரங்களும், கொள்கைகளும் நமக்குரியவை அவற்றை நாம் கடைப்பிடிக்கலாம், அது மகிழ்ச்சிக்குரியது ஆனால் அவற்றை வல்வைக்குள் கலந்து பொதுமைப்படுத்தி முரண்பாடுகளை வளர்ப்பதற்கு வல்வையை தளமாக்க முடியாது.
நமக்குள் தோன்றும் சிக்கல்கள் இன்றய கொதி நிலைகளால் சூடேற்றப்பட்டவை, ஆனால் வெகு காலத்திற்கு முற்பட்டது வல்வை என்பதைப்புரிந்தால் இந்தக் குழப்பம் ஏற்படாது.
அனைவரையும் ஒன்றிணைக்க இது அவசியம், ஒரு தாய்க்கு பல பிள்ளைகள் இருப்பதில் தவறில்லை, ஆனால் தாய் ஒன்றுதான்.
நமக்குள்ள பேதங்களைக்காட்டி தாய் என்ற வல்வையை நோகடிக்கக்கூடாது, வல்வை என்ற ஒலி கேட்டால் பேதங்கள் மறைந்து அனைவரும் சகோதரங்களாக ஒன்றுபட்ட காலத்தை அழிப்பதை அனுமதிக்க இயலாது என்று ஆசிரியர் கி.செல்லத்துரை கருத்தரங்கை நடத்தும்போது தெரிவித்தார்.
வல்வை மக்களை ஒன்றிணைக்கவும் புதிய புரிதல்களை ஏற்படுத்தவும், ஒன்றுகூடல்களை வருடத்தில் இரண்டு தடவைகள் நடத்துவதென முடிவு காணப்பட்டது.
அதைத்தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்வுகள் மேடை நடனங்கள், தம்பதியர்க்கான போட்டிகள் போன்றன இடம் பெற்றன.
மணமுடித்த புதிய தம்பதியர் வரவேற்பு, திருமண நாள் கொண்டாடும் தம்பதியர்க்���ு இனிப்பு வழங்கல், சிறுவர்க்கான பல்வேறு விளையாட்டுக்களும், போட்டிகளும் நடாத்தி பரிசளிக்கப்பட்டது.
ஆதிகோவிலடி ஜெயம் எழுதிய ஆழக்கடல் வென்றவர்கள் என்ற நூல் அறிமுகம் செய்யப்பட்டது.
அன்னபூரணியால் வல்வை மாலுமிகள் படைத்த சாதனை காலத்தால் அழியாதது, வல்வை உள்ளவரை வாழும் புகழை எழுதிவிட்டுப் போயுள்ளார்கள்.
அவர்கள் சாதனைகளை மதிப்பதும், அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைப்பதும் பெற்றோர் கடமையாகும்.
அதற்கான ஆவணம் நமக்கு அவசியம், அதற்கு அடிப்படையாக இந்த நூலை ஒவ்வொரு குடும்பத்தினரும் தமது இல்லங்களில் வைத்திருக்க வேண்டும் என்றும், வைத்திருப்பது மட்டுமல்ல வாசித்து பிள்ளைகளுக்கு சொல்வதும் பெற்றோர் கடன் என்றும் எடுத்துரைக்கப்பட்டது.
நுலை அனைத்து குடும்பங்களும் வாங்கினார்கள், அத்தோடு வல்வை புளுஸ் பொன்விழா மலரும் வழங்கப்பட்டது.
மாலைச்சிற்றுண்டி, இரவு விருந்துபசாரத்துடன் நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தன.
தகவல் : கி.செல்லத்துரை. 17.03.2014Leave a Reply

Your email address will not be published.