Search

வாளேந்திய சிங்கமும், பாயும் புலியும் – சேரமான்

அடக்குமுறைக்கு எதிரான நாளாக விளங்கும் உலகத் தொழிலாளர் தினத்தன்று சிங்கள ஆக்கிரமிப்புச் சின்னமான வாளேந்திய சிங்கக் கொடியை பேருவகையோடு கையிலேந்தி அசைத்ததன் மூலம் தனது அடித்தொண்டு அரசியல் ‘சாணக்கியத்தை’ மீண்டுமொரு தடவை ‘பழுத்த அரசியல்வாதியான’ இராஜவரோதயம் சம்பந்தன் வெளிப்படுத்தியுள்ளார். சம்பந்தரின் அரசியல் வாழ்க்கையைப் பொறுத்த வரையில் இதுவொரு புதுமையான விடயம் அல்லவே. காலத்திற்கு ஏற்ப சிங்கக் கொடியையும், புலிக்கொடியையும் மாறி மாறி ஏந்துவது என்பது சம்பந்தரின் அரசியல் வாழ்க்கையில் இயல்பானதொரு பண்பாகவே விளங்கி வருகின்றது

ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வை தேடும் பொழுது வாளேந்திய சிங்கக் கொடியை தூக்கிப் பிடிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று இன்று வாதிடும் சம்பந்தரும் அவரது பரிவட்டங்களும் ஓர் உண்மையை மறந்துவிடுகிறார்கள்: அல்லது அந்த உண்மையை மக்களின் மனங்களிலிருந்து மறைத்துவிட முற்படுகின்றார்கள். அதாவது ஈழத்தீவில் வாளேந்திய சிங்கக் கொடிக்கு இருக்கக்கூடிய குறுகிய வரலாற்றை விட தொன்மையான வரலாற்றைப் புலிக்கொடி கொண்டுள்ளது என்பது அது.
ஈழத்தீவு முழுவதையும் சிங்கள மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தை விட தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்த காலம் அதிகமானது. பௌத்த மதத்தின் வருகையோடு ஈழத்தீவின் வடக்கு, கிழக்கு, மேற்குப் பகுதிகள் தமிழர்களிடமும், மத்திய மற்றும் தென் பகுதிகள் தமது தமிழ்ப் பூர்வீகத்தைத் தொலைத்துவிட்ட சிங்களவர்களிடமும் தங்கினாலும், கடந்த இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டு கால வரலாற்றில் ஈழத்தீவை இரண்டு சிங்கள மன்னர்கள் மட்டுமே ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்துள்ளார்கள்.

 

இவர்களில் ஒருவர் துட்டகாமினி. மற்றையவர் சேர நாட்டு வழிவந்த செண்பகப் பெருமாள் எனப்படும் தமிழ்த் தளபதியை தனது வளர்ப்புப் பிள்ளையாகவும், வாரிசாகவும் கொண்டிருந்த ஆறாம் பராக்கிரமபாகு. இதில் குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் இவ்விரு சிங்கள மன்னர்களின் கொடிகளிலும் வாளேந்திய சிங்கம் பொறிக்கப்படவில்லை. மறுபுறத்தில் ஈழத்தீவை ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்த தமிழ் மன்னர்களின் பட்டியல் ஏராளம்.

 

கரிகாலப் பெருவளவன், எல்லாளன், சேனன், குத்திகன், இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன் என்று ஈழத்தீவை ஒரு குடையின் கீழ் ஆட்சிபுரிந்த தமிழ் மன்னர்களின் பட்டியல் நீண்டு விரிந்து செல்வதோடு இவர்களின் கொடியாக பாயும் புலியே விளங்கியுள்ளது. இவர்களைவிட யாழ்ப்பாண இராசதானியின் மன்னர்களான ஆரியச்சக்கரவர்த்திகள் என்றழைக்கப்படும் சிங்கை ஆரிய வம்சத்தின் ஆட்சிக்கு முன்னர் ஈழத்தீவின் வடக்கு, கிழக்கு, மேற்குப் பகுதிகளில் பாயும் புலியை தமது கொடியில் வரித்துக் கொண்ட தமிழ் மன்னர்களின் ஆட்சி நிகழ்ந்தேறியதை கல்வெட்டுக்கள் உறுதிசெய்கின்றன.
இவ்வாறு ஈழத்தீவில் தொன்மையான வரலாற்றை பாயும் புலிக்கொடி கொண்டிருக்க, மறுபுறத்தில் வெறுமனவே எழுபது ஆண்டு கால வரலாற்றையே சிங்களவர்களின் இன்றைய வாளேந்திய சிங்கக் கொடி கொண்டுள்ளது. பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சி முடிவுக்கு வரும் தறுவாயில் வாளேந்திய சிங்கக் கொடியை இலங்கையின் தேசியக் கொடியாக சிங்கள அரசியல் தலைமைகள் வரித்துக் கொண்ட பொழுது, அதற்குப் புனைகதைகளை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுப் பின்னணி ஒன்றை நிறுவுவதற்கான முயற்சி ஒன்று எடுக்கப்பட்டது.
அதாவது கண்டி இராசதானியை ஆட்சி செய்த ‘தமது’ இறுதி மன்னனின் கொடியில் வாளேந்திய சிங்கம் பொறிக்கப்பட்டிருந்ததாகவும், இக்கொடியையே ஈழத்தீவில் முதன் முதலாகக் கால்பதித்த பொழுது தமது மூதாதையரான விஜயன் நாட்டியதாகவும், அதன் பின்னர் இக்கொடியை தமிழ் மன்னனான எல்லாளனை தோற்கடித்த பொழுது துட்டகாமினி நடுகை செய்ததாகவும், புதியதோர் புனைகதையொன்று அன்றைய சிங்கள அதிகார வர்க்கத்தால் வனையப்பட்டது.

முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வகையில் இப்புனைகதையை சிங்கள அதிகார வர்க்கம் வனைந்தாலும்கூட, அதனை அன்றைய தமிழ் அரசியல் தலைமைகள் வரலாற்று ஆதாரங்களுடன் நிராகரிக்க முன்வரவில்லை என்பது வேதனைக்குரியது. கண்டி இராசதானியை ஆட்சி செய்த இறுதி மன்னன் ஓர் தமிழன். மதுரை நாயக்க வம்சத்தைச் சேர்ந்த கண்ணுச்சாமி என்ற இயற்பெயரைக் கொண்ட இத்தமிழ் மன்னன் சிறீவிக்கிரமராஜசிங்கன் எனும் பெயருடன் ஆட்சிக்கட்டிலேறினான்.

 

சிங்கள இராசதானியாக கண்டி விளங்கினாலும்கூட, ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு மேலாக இம்மன்னனின் வம்சமே கண்டியை ஆட்சி செய்தது. பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வன்னி மன்னன் பண்டாரவன்னியனுடன் இணைந்து வீரப்போர் புரிந்த இம்மன்னன் இறுதியில் சிங்கள பிரதானிகளால் காட்டிக்கொடுக்கப்பட்டான். இம்மன்னன் ஒரு தமிழன் என்பதை அக்காலப் பகுதியில் இம்மன்னனைக் காட்டிக் கொடுத்த சிங்கள பிரதானிகளுக்கும், பிரித்தானிய ஆளுநருக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை தெளிவாகக் குறிப்பிடுகின்றது.
பிற்காலத்தில் சிங்கள அதிகார வர்க்கம் மிகைக்கற்பிதம் செய்தமை போன்று இம்மன்னனின் கொடியில் வாளேந்திய சிங்கம் இருக்கவில்லை. மாறாக வைணவ மரபின்படி திருமாலின் அவதாரமாக வர்ணிக்கப்படும் நரசிம்மனின் வாளேந்திய ஓவியமே இக்கொடியில் பொறிக்கப்பட்டிருந்தது.
அடுத்தது விஜயனின் சிங்கக் கொடி பற்றிய புனைகதை. சிங்கத்திற்கும், வங்கதேச இளவரசி ஒருத்திக்கும் இடையில் ஏற்பட்ட புணர்ச்சியின் விளைவாக பிறந்ததாகக் கூறப்படும் சிங்கபாகு எனப்படும் விஞ்ஞான நடைமுறைக்கு ஒவ்வாத மகாவம்சத்தின் கற்பனைப் பாத்திரத்தின் வழித்தோன்றலாக வர்ணிக்கப்படும் விஜயனின் கொடியாக சிங்கக் கொடி விளங்கியதற்கான ஆதாரங்கள் எவையும் இதுவரை எந்தவொரு வரலாற்று ஆய்வாளர்களாலும் கண்டுபிடிக்கப்படவில்லை. விஜயனின் வருகை பற்றி மகாவம்சத்தில் கூறப்படுவதுகூட ஓர் கட்டுக்கதை என்றே வரலாற்று ஆய்வாளர்கள் பலர் இன்று கருதத் தலைப்படுகின்றனர்.
முதலில் குவேனி என்ற இயக்கர் குலப் பெண்ணையும், பின்னர் மதுரைத் தமிழ் இளவரசியையும் விஜயன் திருமணம் புரிந்ததாகக் குறிப்பிடும் மகாவம்சத்தின் எந்தவொரு பகுதியிலும் அவனது கொடியில் சிங்கம் பொறிக்கப்பட்டமை பற்றி ஒரு வார்த்தையைக் கூடக் காண முடியாது. இதிலிருந்து சிங்கத்தின் பேரன் என்று கூறப்படும் விஜயனின் வருகை பற்றிய கதையை மட்டுமன்றி, விஜயன் நாட்டியதாகக் கூறப்படும் சிங்கக் கொடி பற்றிய கதையையும் கட்டுக்கதைகளாகவே கருதலாம்.
மூன்றாவது துட்டகாமினியின் சிங்கக் கொடி பற்றிய கட்டுக்கதை. எல்லாளன் உட்பட ஈழத்தை ஆட்சி செய்த முப்பத்திரண்டு தமிழ் மன்னர்களை துட்டகாமினி தோற்கடித்ததாகக்  குறிப்பிடும். மகாவம்சம், தனது கொடியாக வாளேந்திய சிங்கத்தை அவன் வரித்துக் கொண்டதாக எந்தவொரு இடத்திலும் குறிப்பிடவில்லை. உண்மையில் துட்டகாமினியின் கொடியில் சிங்கம் இருந்ததாக சிங்கள அதிகார வர்க்கம் வனைந்த புனைக்கதைக்கான நதிமூலமாக தம்புள்ளையில் உள்ள குகையன்றில் காணப்படும் ஓவியம் திகழ்கின்றது.

 

ஏறத்தாழ நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியர்களின் ஆட்சியில் வரையப்பட்ட இவ் ஓவியத்தின் மேற்புறத்தில் சந்திரனும், சூரியனும் பொறிக்கப்பட்டு, கீழ்புறத்தில் வாளேந்திய சிங்கம் ஒன்று வரையப்பட்டுள்ளது. ஏறத்தாழ இரண்டாயிரத்து நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றதாகக் கூறப்படும் எல்லாளனுக்கும், துட்டகாமினிக்கும் இடையிலான சண்டை பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் எவற்றிலும் காணப்படாத வாளேந்திய சிங்கம், திடீரென நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்ட குகை ஓவியத்தில் காணப்பட்டமைக்கான பின்னணியை நாம் புரிந்து கொள்வது இலகுவானது.

 

பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சியில் கருக்கொண்ட சிங்கள-பௌத்த அடிப்படைவாத எழுச்சியில் வரையப்பட்ட ஒன்றாகவே இக் குகை ஓவியத்தை நாம் கருதலாம்.  வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி, பிரித்தானியர்களின் ஆட்சிக்கு முன் சிங்களவர்களின் கோட்டை இராச்சியத்தை ஆட்சி செய்த ஒல்லாந்தர்களில் சின்னங்களில் ஒன்றாக விளங்கிய வாளேந்திய சிங்கத்தை அடிப்படையாகக் கொண்டே இவ் ஓவியம் வரையப்பட்டுள்ளது

அதேநேரத்தில் தற்பொழுது சிறீலங்காவின் தேசியக் கொடியில் பொறிக்கப்பட்டுள்ள வாளேந்திய சிங்கத்தை அச்சொட்டாகப் பிரதிபலிக்கும் ஓவியம் ஒன்று, சிங்களத்துடன் எந்த விதத்திலும் தொடர்புபட்டிருக்காத ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட இத்தாலியின் வெனிஸ் சிற்றரசின் சின்னங்களில் ஒன்றாக விளங்கியமை வரலாற்று ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இவ்வாறான வாளேந்திய சிங்கத்தை ஒத்த சின்னங்கள் பின்லாந்திலும், பிரித்தானியாவிலும் காணப்படுகின்றன.
மறுபுறத்தில் தென்னிலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் பொழுது மீட்கப்பட்ட இடுபாடுகள் சிலவற்றில் சிங்களவர்களில் புராதன கழிப்பறை வாயில்களில் சிங்கம் பொறிக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது தமது புனித சின்னமாக அல்லது தேசிய சின்னமாக சிங்கத்தை புராதன சிங்களவர்கள் கருதியிருக்கும் பட்சத்தில், கழிப்பறை வாயில்களில் சிங்கத்தைப் பொறித்திருக்க மாட்டார்கள் என்பதே வரலாற்றாய்வாளர்களின் கருத்தாக விளங்குகின்றது.
இவ்வாறு சிங்கத்திற்கும், சிங்களவர்களுக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்பு என்பது வடதுருவத்திற்கும், தென்துருவத்திற்கும் இடையிலான இடைவெளியாக விளங்கினாலும்கூட, நவீன சிங்கள-பௌத்த இனவாதத்தின் சின்னமாக இன்று வாளேந்திய சிங்கம் விளங்குவதை நாம் மறந்துவிட முடியாது. இன்று சிறீலங்காவின் தேசியக் கொடியில் பொறிக்கப்பட்டுள்ள வாளேந்தியே சிங்கம் சிங்கள இனத்தையே குறியீடு செய்கின்றது. அதன் இடதுபுறத்தில் தமிழர்களையும், முஸ்லிம்களையும் வந்தேறு குடிகளாக வரையறை செய்யும் இரண்டு வர்ணக் கோடுகளை நோக்கியே தனது வாளை சிங்கம் உயர்த்திப் பிடித்துள்ளது.

 

1948ஆம் ஆண்டிலிருந்து சிங்களம் அரங்கேற்றி வரும் இனக்கருவறுப்பின் அடையாளமாகவே சிங்களத்தின் தேசியக் கொடியில் பொறிக்கப்பட்டுள்ள வாளேந்திய சிங்கம் விளங்குகின்றது எனக்கூறின் மிகையில்லை. மறுபுறத்தில் ஈழத்தீவில் தமிழினத்தின் தொன்மையான வரலாற்றையும், இருப்பையும் குறியீடும் செய்யும் அசைக்க முடியாத அடையாளமாக தமிழீழத்தின் தேசியக் கொடியில் பொறிக்கப்பட்டுள்ள பாயும் புலி விளங்குகின்றது. கரிகாலச் சோழனின் காலத்திலிருந்து ஈழத்துக் கரிகாலன் என விளிக்கப்படும் தலைவர் பிரபாகரனின் இருபது ஆண்டுகால தமிழீழ நடைமுறை அரசின் கொடியாகவே பாயும் புலி திகழ்ந்துள்ளது.

 

இந்த வகையில் ஒரு குடையின் கீழ் இலங்கையில் அரசியல் தீர்வைத் தேடும் இன்றைய தமிழ் அரசியல்வாதிகள், வாளேந்திய சிங்கக் கொடியைக் கீழேபோட்டுவிட்டு பாயும் புலிக் கொடியை தேசியக் கொடியாக ஏற்றுக் கொள்வதே வரலாற்று ரீதியில் பொருத்தமாக இருக்கும்.
வரலாற்று உண்மைகளைப் புறந்தள்ளி, பாயும் புலிக் கொடியைக் கீழே போட்டுவிட்டு, பேருவகையோடு வாளேந்திய சிங்கத்தை இன்று ஏந்தி நிற்கும் சம்பந்தருக்கும், அவரது பரிவட்டங்களுக்கும் ஓர் உண்மை விரைவில் உறைக்கும் என்பதில் ஐயமில்லை. தாம் ஏந்தியுள்ள வாளேந்திய சிங்கம் தம்மை நோக்கியே வாளை உயர்த்தியுள்ளது என்பதை விரைவில் சம்பந்தரும், அவரது பரிவட்டங்களும் புரிந்து கொள்வார்கள். ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை தோற்கடிப்பதற்காக சிங்களத்திற்காக வக்காலத்து வாங்கி வாளேந்திய சிங்கக் கொடியை ஏந்தி நின்ற தமிழ் வழித்தோன்றலான தாமரை குணநாயகத்திற்கு நிகழ்ந்த கதி இதனையே கட்டியம்கூறி நிற்கின்றது.

நன்றி : ஈழமுரசு

 

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *