வல்வெட்டித்துறையில் உள்ள விளையாட்டு மைதானங்களில், தீருவில் இளைஞர் விளையாடுக் கழகமைதானம் ஒரு நல்ல தரமான மைதானமாக இருந்து வருவது அனைவரும் அறிந்ததே.தற்போது கழக வளர்ச்சியையும், மைதான புனரமைப்பு வேலைகளையும் துரிதமாக முன்னெடுக்க ஊரிலும், வெளிநாடுகளில் வசிக்கும் தீருவில் கழக அங்கத்தவர்களால் முடிவெடுக்கப்பட்டு அதற்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. இதன் முதல் கட்டமாக திரு.செந்திவடிவேல் குடும்பத்தினரால், சமீபத்தில் தீருவில் அறிவகம் எனும் பெயரில், நூல் நிலையம், மற்றும் கழகக் காரியாலயம் என இரண்டுமாடிக் கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா விமரிசையாக நடந்தது. இந்த நூல் நிலையம், வழமையான நூல் நிலையங்கள் போல் இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக
இருக்கவேண்டும் எனும் உயரிய நோக்கத்தோடு அனைத்துத் தரப்பினருக்கும் தேவைப்படும் சகல புத்தகங்களும் இங்கு கிடைக்கக் கூடியபடி வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் அடுத்த கட்டமாக இந்த மைதானத்தை, முற்று முழுதாக மாற்றி அமைக்கும் பணிகள் கடந்த 3 வாரங்களாக கழக இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மிக வேகமாக வளர்ந்து வரும் இந்த மைதானம் வெளிநாட்டுத் தரத்திற்கு அமைவாக உருவாகி வருகின்றது என்பது தான் இங்கு முக்கியமாக குறிப்பிடக் கூடிய விடயம்.
கடந்த சில நாட்களாக அருகில் உள்ள குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண் மூலம் மைதானம் மேலும் சிறிதளவு உயர்த்தப்பட்டுள்ளது.
சுற்றி வர தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி முடிவடைந்ததும் அடுத்த கட்டமாக மைதானம் முழுவதும் புல் விதைகள் தூவப்பட இருப்பதால் தற்போது நிலம் முழுவதும், தினமும் தண்ணீர் ஊற்றி மைதானத்தை ஈரலிப்பாக்கும் வேலைகள் நடைபெறுகின்றன.
மின்னொளியில் போட்டிகள் நடத்துவதற்கு ஏற்றவாறு நான்கு மூலைகளிலும் உயரமான தூண்கள் அமைத்து மின் விளக்குகள் பொருத்தப்படவுள்ளன.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மைதானத் திறப்பு விழா வெகு விமரிசையாக நடாத்த முடிவெடுக் கப்பட்டுள்ளது.