வல்வை விளையாட்டுக் கழகம் வெற்றி

வல்வை விளையாட்டுக் கழகம் வெற்றி (புகைப்படங்கள் இறுதியில்)
பருத்தித்துறை வட்டாரத்திற்கு உட்பட்ட 19 வயதிற்குற்பட்ட வீரர்களுக்கான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது.

22,23 ஆம் திகதி திக்கம் மைதானத்தில் பருத்தித்துறை வட்டாரத்திற்குட்பட்ட அனைத்துப் பகுதிகளில் இருந்தும் சுமார் 16 உதைபந்தாட்டக் கழகங்கள் பங்குபற்றிய 19 வயதிற்குற்பட்ட வீரர்களுக்கான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி நடைபெற்றது. வல்வை விளையாட்டுக் கழகம் சுற்றுப்போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக விளையாடியது. முதல் சுற்றில் நெடியகாடு விளையாட்டுக் கழகத்தை வென்று கால்இறுதிக்குள் நுளைந்தது. கால்இறுதியில் சென்தோமஸ் விளையாட்டுக் கழகத்தை வென்று அரைஇறுதிக்கு தகுதிபெற்றது. அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது.

ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு விளையாட்டுத்துறையின் பிராந்திய செயளாளர் (Division Secretary) திரு.சத்தியசீலன் அவர்கள் முன்னிலையில் இறுதிஆட்டம் நடைபெற்றது.விண்மீன் கழகத்திற்கு எதிரான இறுதிஆட்டத்தில் வல்வை விளையாட்டுக் கழகம் ஆரமபம் முதலே ஆதிக்கம் செலுத்தியது, முதல் பாதியில் மயூரன் முதலாவது கோலையும், உதயன் இரண்டாவது கோலையும் அடித்ததன் மூலம் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் சீலன் அடித்த கோல் மூலம் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, பிரதம விருந்தினர் திரு. சத்தியசீலன் (DS) அவர்களிடம் இருந்து வெற்றிக்கிண்ணத்தை பெற்றுக் கொண்டனர்.

இதுபற்றி கருத்து தெரிவித்த வல்வை புளுசின் ஆரம்பகால விளையாட்டு வீரரும், கழகத்தை நீண்ட காலமாக வழிநடத்திவரும், தற்போதைய போசகருமாகிய திரு.மு.தங்கவேல் அவர்கள் தற்பொழுது வல்வை விளையாட்டுக் கழகம் சிறப்பாக விளையாடி வருவதாகவும், இந்த வெற்றி வீரர்களுக்கும், அபிமானிகளுக்கும்  மேலும் உற்சாகம் அளித்துள்ளதாக தெரிவித்ததுடன், உதைபந்தாட்டம் மாத்திரம் இன்றி தடகளம், கரப்பந்தாட்டம்(set up) மென்பந்தாட்டப் போட்டிகளிலும் வல்வை விளையாட்டுக் கழகம் சிறப்பாக விளையாடி வருவதாக தெரிவித்தார்.
அத்துடன் கழகத்தை சிறந்த முறையில் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு நிதியின் பங்கு முக்கியமானது என்பதால் வெளிநாடுகளில் வாழும் வல்வை மக்களும் வல்வை புளுசின் முன்னால், இன்னால் விளையாட்டுவீரர்களும், நலன்புரிச் சங்கங்களும் தம்மால் முடிந்த நிதியை அனுப்பி உதவி புரியுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொண்டார்.(மு.தங்கவேல் 0094 7752 22235)
வல்வையில் இருந்து விளையாட்டுச் செய்திகளை எமக்கு அனுப்பிவைக்கும் நண்பருக்கு VVTUK.COM இன் நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published.