நீரிழிவு நோயால் பாதிப்பட்டிருப்பவர்களுக்கு காது செவிடாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று உலக அளவில் அச்சுறுத்தும் நோயாக நீரிழிவு நோய் உள்ளது. உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரியவந்துள்ளது.
நீரிழிவு நோயினால் பல்வேறு நோய்கள் உருவாகின்றன. கண்பார்வை குறைபாடு, நரம்பு மண்டல பாதிப்பு, பாத எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் நீரிழிவின் பாதிப்பினாலேயே ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது நீரிழிவு நோயாளிகளுக்கு காது கேட்கும் திறன் குறையும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் காதின் உள் செல்லும் நரம்புகள் பாதிக்கப்படுவது தான் என்கின்றனர் நிபுணர்கள்.
இது குறித்து பல ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. இவற்றை மேற்கோள் காட்டியுள்ள மருத்துவர்கள் நீரிழிவு நோயால் காதுகள் கேட்கும் சக்தியை இழக்கும் என்று கூறுகின்றனர்.
மேலும் நீரிரிவு நோய் உள்ளவர்களுக்கு, அந்த நோய் இல்லாதவர்களுக்கு ஏற்படுவதைக் காட்டிலும் காது செவிடாகும் வாய்ப்பு இரு மடங்கு அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள்.
இன்றைக்கு காது நோய் சிறப்பு மருத்துவரை சந்திப்பது பெரும்பாலும் இளம் வயதினர்தான். அவர்களுக்கு ஒரு காது மந்தத்தன்மை அதிகம் ஏற்படுகிறது. இதற்கு காரணம் நீரிழிவு நோய்தான் என்கின்றனர் நிபுணர்கள்.
மேலும் காதுகளில் அழுக்கு சேருவது என்பது நீரிழிவு நோயின் ஒரு அறிகுறியாகும். ஏனெனில் காதுகளில் அழுக்கைப் போக்கும் கெராடின் என்ற ஒன்று நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு குறைவாக இருக்கும் அல்லது இல்லாமலே கூட போய்விடும்.
கெராடின் குறைபாட்டினால் காதுகளில் அழுக்கு விரைவில் சேர்ந்து காது செவிடாகும் வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் தங்கள் காதுகளின் உள்ளுக்குள் சப்தங்கள் ஏற்பட்டாலோ அல்லது ரீங்காரம் போன்று சப்தம் வந்தாலோ உடனே காது சிறப்பு மருத்துவரைப் பார்ப்பது நல்லது.
எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் இனி கண், இருதயம், கால்கள், பாதங்களுடன் காதுகளையும் அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்வது நல்லது என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.