தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர், புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை நேற்றுமாலை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.
சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் பேச்சுக்களுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இரா.சம்பந்தன்,
இலங்கைத் தமிழர்கள் கௌரவமாகவும், சுயமரியாதையுடனும், பாதுகாப்புடனும் வாழ்வதற்கு சிறிலங்கா உதவ வேண்டும் என்பதை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும் என்றும், தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்க வேண்டும் என்ற விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒன்றிணைந்து இந்தியா செயற்படும் என்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் உறுதியளித்தார்.
அவருடன் நடத்திய பேச்சுக்கள் திருப்திகரமாக அமைந்தன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையே நடைபெறும் பேச்சுக்களில் எட்டப்படும் உடன்பாட்டை, சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்லது சிறிலங்கா – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டு உடன்பாடு என்ற முறையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு சிறிலங்கா அரசு கொண்டு செல்ல வேண்டும்.
எமது இந்த நிலைப்பாட்டை இந்தியப் பிரதமரிடம் தெளிவுபடுத்தியுள்ளோம்.
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது நடைபெறும் தாக்குதல்களை நிறுத்துவது குறித்தும், இந்தியாவில் உள்ள தமிழ் அகதிகளுக்கு உதவிகளை அளித்து, அவர்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவது தொடர்பாகவும் இந்தியப் பிரதமருடன் ஆலோசனை நடத்தினோம்” என்று தெரிவித்தார்.
அதேவேளை, இந்த சந்திப்பில் கலந்து கொண்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன், கொழும்பு ஊடகம் ஒன்றுக்குத் தகவல் வெளியிடுகையில்,
“சிறிலங்கா அரசாங்கம் தீர்வு விடயத்தில் இழுத்தடிப்புப் போக்கினையே கடைப்பிடித்து வருகின்றது.
13வது திருத்தச் சட்டத்தைக் கூட நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தயாராக இல்லை.
முன்னைய தீர்வு திட்டங்களின் அடிப்படையில் கூட பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லை.
வடக்கு கிழக்கில் இராணுவக் குடியேற்றங்கள் இடம்பெறுவதுடன் காணிகள் சுவீகரிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு சிறிலங்கா அரசாங்கம் ௭ம்முடன் பேச்சுக்களை நடத்திய போதிலும் இடைநடுவில் அதை முறித்துக் கொண்டது.
தற்போது நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வந்தால் மட்டுமே பேச்சுக்களை ஆரம்பிக்கலாமென்று கூறிவருகின்றது.
தெரிவுக்குழுவில் 31 பேர் அங்கம் வகிக்கின்ற போதிலும் அதில் அதிகமானோர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
இந்தநிலையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு நாம் சென்றால் 13 வது திருத்தத்தை கூட ௭ம்மால் பெறமுடியாத நிலையேற்படும்.
தெரிவுக்குழுவிற்கு நாம் ௭திரானவர்களல்ல. ஆனால், சிறிலங்கா அரசாங்கமும் நாமும் பேச்சு நடத்தி தீர்வுத்திட்டத்தை ஏற்கும் நிலைஉருவாகவேண்டும்.
அதன் பின்னர் தெரிவுக்குழுவில் இணைவது குறித்து பரிசீலிக்கலாம்.
தீர்வுத்திட்டத்தை ஏற்கும் நிலையை உருவாக்குவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க சிறிலங்கா அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் நாடு திரும்புவதற்கும் உதவி ஒத்தாசைகள் வழங்கப்பட வேண்டும்.
நாம் தீர்வு விடயத்தில் அக்கறையுடன் செயற்பட தயாராகவுள்ளோம்.
ஆனால், சிறிலங்கா அரசாங்கம் உதாசீனப் போக்கில் முறையில் செயற்பட்டு வருகின்றது.
இது தொடர்பாக இந்தியா கவனம் செலுத்த வேண்டும் ௭ன்று இந்தியப் பிரதமரிடம் வலியுறுத்தினோம்.
௭மது நிலைப்பாட்டை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் முழுமையாக ஏற்றுக்கொண்டார்” ௭ன்று தெரிவித்தார்.