இராணுவப் புலனாய்வாளர்களின் தாக்குதலுக்குள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நல்லூர் பிரதேசசபை தலைவர் பிரேமகுமார் வசந்தகுமாரை த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சென்று பார்வையிட்டுள்ளார்.
நல்லூர் பிரதேசசபைக்கு சொந்தமான காணியை இராணுவம் அத்துமீறி அடாவடித்தனமாக ஆக்கிரமிப்பதற்கு எதிராக நல்லூர் பிரதேசசபை சட்ட ரீதியான மற்றும் ஜனநாயக வழியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில்,மேல் நீதிமன்றில் இக்காணி தொடர்பான வழக்கை தொடர்வதற்கான ஆவணங்களை நல்லூர் பிரதேசசபை தலைவர் கொண்டு சென்று கொண்டிருந்தபோது அவர் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது இந்த நாட்டில் நீதி அஸ்தமித்து இருப்பதை வெளிப்படுத்துகின்றது என பா.உறுப்பினர் சி.சிறீதரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வசந்தகுமாரை பார்வையிட்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் மேலும் தெரிவிக்கையில்,
ஜனநாயக வழியில் இந்த நாட்டில் எதுவும் செய்ய முடியாது என்பதையும் இராணுவம் தமிழர் நிலங்களை அபகரிப்பதை தடுத்து நிறுத்த முயல்பவர்களுக்கு இப்படியான கீழ்த்தரமான நாகரிகமற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதையும் இந்த தாக்குதல் சம்பவம் வெளிப்படுத்துகின்றது என்றும் இது சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.