செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான உண்மைகளை வெளிக்கொணரும் செயற்பாடுகள் நிதி பற்றாக்குறை காரணமாக ஒருபோதும் நிறுத்தப்படாது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளுக்கு தேவையான வளங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதிகாரிகள் பற்றாக்குறை காரணமாக சில செயற்பாடுகள் தாமதமடைந்திருந்த நிலையில், தற்போது தேவையான அதிகாரிகளை அதிகரித்து வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஓஎம்பி (காணாமல்போனோர் பற்றிய அலுவலகம்) தொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளை இயன்றவரை அடுத்த வருடத்திற்குள் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தி, தேவையான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
சட்டம் அனைவருக்கும் சமம்
நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு எனவும் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“காரணங்களைக் காட்டி பாதிக்கப்பட்டவர்களின் விடயங்கள் நீண்ட காலமாக தாமதப்படுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மையை கண்டறிந்து, உரிய நீதியை வழங்குவதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்” என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், அரசாங்கம் சட்டத்தின் வரம்புகளை மீறி எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளாது என்றும், நாட்டின் சட்டத்திற்கும் நீதித்துறை நடைமுறைகளுக்கும் அமைவாகவே அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான உண்மைகளை கண்டறிவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும், இதற்கான தேவையான ஒத்துழைப்பை அரசாங்கம் வழங்கும் எனவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதியளித்தார்.










