ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் ஒரு வாரத்தைக் கடந்துள்ளது.
இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், சென்னையில் 25க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை சைதாப்பேட்டையில் இருந்து பேரணியாக புறப்பட்ட 300 மாணவர்களை தடுத்து நிறுத்திப் பொலிஸார் கைது செய்தனர்.
10க்கும் மேற்பட்ட பேருந்துகளில் அவர்களை ஏற்றிச் சென்ற பொலிஸார் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் காவலில் வைத்துள்ளனர்.
மேலும், சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்து பேரணியாக சென்று இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற கே.கேந.நகர் மீனாட்சி பொறியியல் கல்லூரி மாணவர்கள் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
அப்போது, இலங்கைக்கு எதிராக இந்தியாவே தனித் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தினர்.
சென்னை விமான நிலையத்தை பச்சையப்பன் கல்லூரி 500 மாணவர்கள் இன்று முற்றுகையிட முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
மாணவர்களின் தொடர் போராட்டத்தால் அனைத்து இடங்களிலும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதால் சென்னை பரபரப்புடன் காணப்படுகிறது.