பொன் விழாக்காணும் கணபதி பாலர் பாடசாலை படத்தொகுப்புக்கள் 21.01.2021
கணபதி படிப்பகத்தின் 5வது ஆண்டு நிறைவில் 1972 இல் இப்பகுதி சிறார்களின் கல்வி மேம்பாட்டிற்காக வல்வெட்டித்துறையில் நெடியகாட்டுப் பகுதியில் தைப்பூச நன்நாளில் கணபதிபாலர் பாடசாலை எனும் பெயரோடு பிள்ளையார் கோவிலின் தெற்கு புறமாக உள்ள சிவஸ்ரீ.சோ.நந்தகோபாலகுருக்கள் (பொன்னுஐயா) வீட்டில் அவரின் பாவனையில் உள்ள மணவறை அலங்கார பொருட்கள் வைக்கும் அறையில் பாலர் பாடசாலையானது ஆரம்பிக்கப்பட்டது.
இப்பாலர் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் முதலாவது ஆசிரியையாக திருமதி. துரைராஜரட்ணம் தயாநிதி அவர்கள் கடமையாற்றியுள்ளார்.
பின்னர் 1972.10.01 அன்று புதிய பாலர் பாடசாலைக்கட்டடத்திற்கு நிதி திரட்டும் முயற்சியின் முதற்கட்டமாக வல்வை ரஞ்சனா தியேட்டரில் ‘குழந்தைக்காக’ என்னும் திரைப்படம் நிதியுதவிக் காட்சியாக காண்பிக்கப்பட்டது. திரைப்படக் காட்சி மூலமும், நன்கொடையாக பெற்ற பணத்தினையும் கொண்டு 1977 இல் நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய முன் வீதியில் பாலர் பாடசாலைக்கான நிரந்தரக்கட்டடம் ஒன்று அன்றைய இளைஞர்கள் பலரின் சரிர உதவியுடன் கட்டி எழுப்பப்பட்டு இறுதிக்கட்டத்தில் ஆலய வீதி விஸ்தரிப்பிற்காக ஆலய நிர்வாகத்தினரதும், ஊர்ப்பெரியவர்களின்தும் வேண்டுகோள்களுக்கு இணங்க அக்கட்டடம் உடைக்கப்பட்டு ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் 1981ல் கணபதி படிப்பக நிர்வாகத்தின் முயற்சியால் நெடியகாடு பிள்ளையார் கோவில் கிழக்கு திசைஆதனத்தில் நிரந்தர கட்டடம் அமைக்கப்பட்டது. இந்தப் பாலர் பாடசாலைக் கட்டடம் அமைக்கும் பணியில் அன்றைய நிர்வாக உறுப்பினர்கள் ஊதிய செலவைக் குறைக்கும் முகமாக தாங்களும் கல் மண் சுமந்து கட்டட வேலையில் தம்மை அர்ப்பணித்தார்கள் என்பது போற்றப்பட வேண்டிய விடயமாகும்.
இவ்ஆதனமானது திரு.பொன்னம்பலம் ஓசியர் அவர்களால் நெடியகாடு பிள்ளையார் ஆலயத்துக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கமையாகும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஜக்கியராஜ்ஜியத்தைத் தளமாகக்கொண்டியங்கும் நெடியகாடு அபிவிருத்திச் சபையின் மூலம் கொள்வனவு செய்யப்பட்டு படிப்பகத்திற்கென அன்பளிப்புச்செய்யப்பட்ட காணியில் நெடியகாடு அபிவிருத்திச்சபையினரின் பிரதான நிதி அனுசரணையுடனும் மற்றும் கணபதி பாலர் பாடசாலை பழையமாணவர்கள், நலன்விரும்பிகளின் நிதி அன்பளிப்புக்கள் மூலமும் மற்றும் அருமைச்சந்திரலிங்கம் மலர்ரோகினிஅம்மா ஞாபகாரத்த நிதி அனுசரணையுடனும் நவீன வசதிகளுடன் கூடிய பாலர்பாடசாலைக் கட்டடமும் அதனுடன்கூடிய மண்டபமும் மற்றும் பாலர் பூங்காவும் அமைக்கப்பட்டு கடந்த 2018 ஆம் ஆண்டு தைப்பூச நன்னாளில் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கடந்த 50 ஆண்டுகாலமாக வல்வெட்டித்துறைப் பிரதேச பாலர்களிற்கு மட்டுமன்றி அயற்கிராம பாலர்களுக்கும் சிறப்பான சேவையினையாற்றி முதற்தர பாலர்பாடசாலையாகவும் பெயர்ப்புகழ்மிக்க பாலர் பாடசாலையாகவும் விளங்குவதற்கு காரணம் காலத்திற்கு காலம் அர்ப்பணிப்பான சேவையாற்றிய, ஆற்றிக்கொண்டிருக்கும் ஆசிரியைகளும், கணபதி படிப்பக நிர்வாகத்தினருமே என்றால் அது மிகையாகாது.






















































































