முல்லைத்தீவு மாவட்டம், கொக்கிளாய் பகுதியில் காணிச் சொந்தக்காரரை விரட்டியடித்து விட்டு, அங்கு விகாரை ஒன்றை அமைக்கும் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.கொக்கிளாய் பகுதியில் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த காணிகளிலிருந்து அந்த மக்கள் வெளியேற்றப்பட்டு காணிகளை அபகரிக்கும் பணிகள் சீருடைத்தரப்பின் அனுசரணையோடு பெரும்பான்மையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் கொக்கிளாய் தபால் நிலையம், வைத்தியசாலை வளாகம் என்பவற்றுக்கு அண்மையில் உள்ள காணியில், விகாரை ஒன்றினை அமைக்கும் பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறித்த காணியிலிருந்து பூர்வீகமாக வாழ்ந்துவந்த அதன் உரிமையாளர் விரட்டப்பட்டுள்ளார். இந்தக் காணிக்கான அனுமதிப்பத்திரம் அவருக்கு 1921ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறிருந்தும் அந்தக் காணியில் அடாத்தாக விகாரை அமைக்கப்பட்டு வருகிறது.
காணியின் பின்புறத்தில் இரவு வேளைகளில் கனரக வாகனத்தின் உதவியுடன் கடந்த வாரம் பெரிய குழி ஒன்று வெட்டப்பட்டுள்ளது.
அதற்குள் ஏதேனும் தொல்லியல் பொருள்களை புதைத்து விட்டுப் பின்னர் குறித்த இடத்தில் பௌத்த விகாரை இருந்த சான்று என்று காட்டுவதற்கான முயற்சியாக இருக்கலாமோ என்றும் அப்பிரதேச மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.










