வல்வை செய்திகள்

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழீழப்பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்த்திய முதலாவது உரையான “சுதுமலைப் பிரகடனம்” உரை நிகழ்த்திய தினம் 1987

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்
தமிழீழப்பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்த்திய முதலாவது உரையான “சுதுமலைப் பிரகடனம்” உரை
நிகழ்த்திய தினம் 1987

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் “சுதுமலைப் பிரகடனம்” உரை விபரம்:-

எம்மக்களது விடுதலைக்காக எம்மக்களது விமோசனத்திற்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம், தமிழீழ மக்களின் ஒரே பாதுகாப்பு சாதனமாக இருந்துவந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எம்மிடமிருந்து பெற்றுக்கொள்வதிலிருந்து தமிழீழ மக்களின் பாதுகாப்பு என்ற பெரும்பொறுப்பையும் இந்திய அரசு ஏற்றுக்கொள்கிறது, ஆயுதக்கையளிப்பு என்பது இந்த பொறுப்புமாற்றத்தைதான் குறிக்கிறது.

நாம் ஆயுதங்களை கையளிக்காதுபோனால் இந்திய ராணூவத்துடன் மோதும் துர்பாக்கிய சூழ்நிலை நமக்கு ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை. தமிழீழத்தனியரசே தமிழீழ மக்களின் நிரந்தர பிரச்சனைக்கு தீர்வளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கையுண்டு, தமிழீழ இலட்சியத்திற்காக நான் தொடர்ந்து போராடுவேன்.

தமிழீழ மக்களின் நலன்கருதி இடைக்கால அரசில் பங்குபெற அல்லது தேர்தலில் போட்டியிடவேண்டிய சூழ்நிலை நமது இயக்கத்திற்கு ஏற்படலாம், ஆனால் நான் எக்காலகட்டத்திலும் தேர்தலில் பங்குபெறப்போவதில்லை. இதை நான் மிகவும் உறுதியாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

நமது அரசியல் தலைவிதியை இந்தியா என்கிற நமது வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் வல்லரசு நிச்சயிக்க முடிவு செய்திருக்கும் நிலையில் நம்மால் என்ன செய்ய இயலும்………?

இந்தியப்பிரதமர் எனக்கு சில உறுதிப்பாடுகளை வழங்கினார், நமது மக்களின் பாதுகாப்பிற்கான உறுதிப்பாடுகளையும் அவர் வழங்கினார். இந்தியப்பிரதமரின் ஒளிவுமறைவற்ற நேர்மையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவரளித்த உறுதிமொழியிலும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

பேரினவாத சிங்கள அரசாங்கம் மீண்டும் தமிழின அழிப்பை தொடங்குவதற்கு இந்தியா அனுமதிக்காது என நாம் நம்புகிறோம். இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே நான் இந்திய அமைதிப்படையிடம் நமது ஆயுதங்களை ஒப்படைக்க தீர்மானித்துள்ளோம்.

நாம் இந்தியாவை நேசிக்கிறோம், இந்திய மக்களை நேசிக்கிறோம், இந்தியப்படைகளுக்கு எதிராக நாம் ஆயுதங்களை பயன்படுத்தும் கேள்விக்கே இடமில்லை. நமது எதிரிகளிடமிருந்த நம்மை பாதுகாக்கும் பொறுப்பை இந்தியப்படைகள் ஏற்கின்றன.

நமது ஆயுதங்களை இந்தியப்படைகளிடம் ஒப்படைப்பதின்மூலம் ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரின் உயிருக்கும் உடமைக்கும் முழுப்பாதுகாப்பினை இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது என்பதை வலியுறுத்திக்கூறிக்கொள்கிறேன். இந்தியா எடுத்துக்கொண்ட இம்முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதைத்தவிர நமக்கு வேறுவழி ஏதுவும் இல்லை. இந்த வாய்ப்பினை அவர்களுக்கு வழங்கி தமிழீழம் மலர வேண்டுவோம்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *