வல்வை செய்திகள்

சக்கரவாகபட்சியும் இந்திரமயிலும் சூரபத்மன் வதைப்படலம் வல்வை வைத்தீஸ்வரர் சமேத வாலாம்பிகா தேவி ஆலய ஆறுமுகப் பெருமானின் சூரன்போரில் நாளை இராட்சத பட்சி போர் நடைபெறவுள்ளது

சக்கரவாகபட்சியும் இந்திரமயிலும் சூரபத்மன் வதைப்படலம் கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளதற்கு அமைய,

சூரபத்மன்முருகனுடனானபோரில் தன்னுடைய இந்திரஞால தேரானது முருகனால் பறிக்கப்பட்டதன் பின் தனது வில்லும் உடைக்கப்பட்ட கோபத்தில், சூரபத்மன் தன் தவத்தால் சிவபெருமானிடம் வாங்கிய சூலாயுத்தை கொண்டு பெரிய சிங்கம் ஒன்றிலே ஏறி முருகனுடனான போரை செய்யும் போது முருகன் தான் கொண்டுள்ள வச்ராயுதத்தால் சூரனின் சூலாயுதத்தை பறித்து அம்புகளால் சிங்கத்தினையும் கொள்கிறார். இவற்றால் மிகவும் கோபமுற்ற சூரபத்மன் மிக கொடிய தோற்றம் கொண்ட சக்கரவாகபட்சி வடிவம் கொண்டு பறந்து திரிந்து சண்டை இடுகிறார். இச்சமயத்தில் முருகன் தேரில் நின்று போரிட முடியாது என நினைத்து இந்திரனை பார்த்தபோது இந்திரன் குறிப்பறிந்து தானே பெரிய_மயில் வடிவம் கொண்டு முருகனை தாங்கிய வண்ணம் ஆகாய வழியாக கடும்போர் நடைபெற்றது.

சக்கரவாகபட்சி ஆனது இந்திரமயிலினை தனது கூரிய அலகுகளாலும் நகங்களாலும் கிழித்து காயமடைய செய்தது. இதை பார்த்து கோபமுற்ற முருகன் அம்புகளால் சக்கரவாகபட்சியை தாக்கினார், உடனே சக்கரவாகபட்சி முருகன் கையில் உள்ள வில்லை உடைத்து எறியும் நோக்கில் நெருங்கிய போது முருகன் தான் கொண்டுள்ள கூரிய வாளால் சூரபத்மன் கொண்ட சக்கரவாகபட்சியினை இரண்டாக வெட்டி வீழ்த்தியதால் சக்கரவாகபட்சியை வெற்றி கொண்டார்.
பின்னர் சூரபத்மன் தன் மாயையால் மீண்டும் போரிட ஆரம்பித்தான்.

மூலம் கந்தபுராணம் சூரபத்மன் வதைபடலம் (பாடல் 350-392)

(( வல்வை சிவன் கோயிலில் கிட்டத்தட்ட 80ஆண்டுகளுக்கு முன்பதாகவே பெரிய செயற்கையான சக்கரவாகபட்சி ஒன்று செய்யப்பட்டுள்ளதோடு சூரசம்ஹார நாளில் அவ்வப்போது போர் புரியவும் விடப்பட்டுள்ளது.
இம்முறை வல்வை சிவன் கோயிலில் சக்கரவாகபட்சி முருகப்பெருமானுடன் போரிடும் காட்சி இன்று மாலை நடைபெறும்))