சமஷ்டி பிரிவினையல்ல என்பது சட்டம் படித்த ஜனாதிபதிக்கு தெரியாதா? மீண்டும் ஆயுதப் போராட்டம் உருவாகும் – சி.வி. விக்னேஸ்வரன்
சமஷ்டி என்பது பிரிவினையல்ல என்பதை சட்டம் படித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தெரிந்திருக்க வேண்டுமென்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
தமிழ் மக்களுக்கான தீர்வு என்ன என்பது பற்றி அரசாங்கத்தினால் கூறப்படவில்லை. எந்த தீர்வும் இதுவரையிலும் முன்வைக்கப்படவுமில்லை, நாங்கள், எங்களின் அபிலாஷைகளை முன்வைத்தால், அதற்கும் குறை கூறுவார்கள்.
மூன்று மாகாணங்களுக்கான தேர்தல்கள் ஒரே காலத்தில் நடைபெற இருப்பதால், சிங்கள மக்களுக்கு ஏதாவது கூறுவதற்காக இப்படியான பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்கள் போல் இருக்கின்றது என்றும் அவர் கூறினார்.
சட்டம் படித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சமஷ்டி தெரிந்திருக்க வேண்டும். சமஷ்டி என்பது பிரிவினையல்ல அப்படி இருந்தும் கூட புலிகள் கேட்ட அதே கோரிக்கையினை தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு கேட்கின்றது என்று கூறுவது சரியில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக சில விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதைப் புரிந்து கூறுகின்றாரா, புரியாமல் கூறுகின்றாரா என்பது தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச உடன்படிக்கைகளுக்கு ஒப்பாக எடுக்கப்பட்ட விடயங்களை தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிட்டுள்ளோமே தவிர, அவ்விடயங்கள் சட்டத்திற்கு புறம்பானதல்ல, சர்வதேச உடன்படிக்கைகள் சரியென்று, எதை குறிப்பிட்டுள்ளனவோ, அதைத் தான் நாம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கியிருக்கின்றோம் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
தனிப்பட்ட மதம், மொழி, கலாசார பின்னணி தனித்துவத்தினை எடுத்துக் காட்டும் வண்ணமாக தகைமைகள் இருப்பதால், சுயநிர்ணய உரிமை இருக்கின்றது. அதில், இரண்டு வகையான சுயநிர்ணய உரிமை இருக்கின்றது.
அந்தந்த நாடுகளில் இருக்கும் தனிநாடுகள், 1945ல் ஐக்கிய நாடுகளில் அங்கத்துவம் வகித்த நாடுகள், அங்கிருக்கும் நாடுகளை பிரிப்பதற்கு இணங்கவில்லை. அந்த வகையில், தான் இலங்கை அரசாங்கத்திற்கு, போரின் போது பல உதவிகளை செய்துள்ளன. ஏனென்றால், நாட்டினைப் பிரிக்கக் கூடாது என்ற நோக்கத்திற்காக என்றும் அவர் கூறினார்.
அத்துடன், உள்ளக சுயநிர்ணயம், வெளியக சுயநிர்ணயம் என்றும், இதில் உள்ளக நிர்ணயத்தினை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம், பிரிந்து போவதாக எங்கும் குறிப்பிடவில்லை என்றும், வெளியக சுயநிர்ணயத்துடன், உள்ளக சுயநிர்ணய கோரிக்கையினை இணைத்து விளங்காதவாறு ஜனாதிபதி அறிக்கை விட்டிருப்பது மன வருத்தத்தினை தருகின்றது எனவும் அவர் கூறினார்.
அரசாங்கம் தீர்வினையும் தராது, எங்களின் தீர்வினைக் காரணம் காட்டி இல்லாது ஒழிக்கப் பார்க்கின்றார்கள் என்றும், பயங்கரவாதிகள் நாட்டைப் பிரிக்கப் பார்க்கின்றார்கள் என்று கூறுவார், தேர்தல் அறிக்கையில் பிழைகள் இருப்பதாக கூறுவார்கள்.
இவ்வாறு உரிமைப் போராட்டத்தினை கொச்சைப்படுத்துவதற்கான முடிவுகளை எடுக்கின்றார்களே தவிர, எந்தவொரு தீர்வினையும் தராது, எங்களைப் பயங்கரவாதக் கண்களோடு சர்வதேசம் பார்க்கும் என்ற எண்ணத்தோடு கூறி வருகின்றார்கள்.
சர்வதேசம் விழுந்து விடும் என்று எண்ணுகின்றார்கள் போல் இருக்கின்றது. சர்வதேசத்திற்கு தெரிந்து விட்டது, எதற்காக இவர்கள் இப்படி சொல்கின்றார்கள், செய்கின்றார்கள் என்று, ஆனால் மக்களுக்கு தெளிவு இருக்க வேண்டுமென்றும் அவர் மேலும் கூறினார்.
2ம் இணைப்பு
மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் இங்கு உருவாகும்
சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களை திரும்பவும் அடக்கு முறைக்குள் தள்ளும் செயற்பாடானது மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தினையே தோற்றுவிக்கும் என்று முன்னாள் நீதியரசரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளருமான சி.வி.விக்னேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அடக்குமுறைக்குள் தமிழர்கள் வாழந்த காரணத்தினாலேயே கடந்த காலத்திலும் நாங்கள் ஆயுதம் தூக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்பதை சிறிலங்கா அரசாங்கம் ஒரு போதும் மறந்துவிடக் கூடாது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்.மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நேற்று நண்பகல் 11 மணியளவில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.
இச் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள், வடக்குமாகாணசபைத் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடும் அரச தரப்பினரும், அமைச்சர் பசில் ராஜபக்சவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்துக் கொண்டாலும், எந்தவிதமான உதவியும் அவர்களால் செய்ய முடியாது, வெளிநாடுகளில் இருந்தும் பணத்தினைப் பெற்றுக் கொள்ள முடியாது, அவர்கள் பொய் பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவித்து வருகின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்து என்ன? என கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்குப் பதிலளித்த சி.வி.விக்னேஸ்வரன்,
இக் கருத்தினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச சொல்லியிருக்கின்றார். அவர் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அவருடைய அரசியலும், பதவியும் அவருடைய சொந்த வீடு போல அவர் கருதுகின்றார். அவர் வகிக்கும் பதவியும், அரசியலும் மக்களுடையது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களுக்கு தனியே ஒரு சுயநிர்ணைய உரிமை உள்ளது. அதனால் அவர்கள் சில சட்டத்திற்கு உரித்துடையவர்கள். எனவே அவர்களுக்கு வழங்க வேண்டியவற்றை கொடுக்க வேண்டியது சட்டரீதியானது.
இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பான வகையில் தமிழ் மக்களுக்கு தேவையான உரிமைகளை சிறிலங்கா அரசாங்கம் வழக்கத் தவறுமானால் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் இங்கு உருவாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.








