Search

மண்ணின் கலைஞர்கள் இருவரின் மறைவு

சித்திரவேல்சாமியும்,மோகணண்ணாவும் மறைந்துவிட்டார்கள் என்பது எல்லா மறைவுச்செய்திகளையும் போல இயல்பாக எடுத்து மிக இயல்பாகவே எம்மை கடந்துபோய்விடக்கூடியவை அல்ல.
ஏனென்றால் இந்த இருவரும் எமக்கு இன்னொரு உலகத்தை தமது கலைப்படைப்புகள் மூலம் திறந்துவைத்த கலைஞர்கள்.ஒருவர் எமது பாரம்பரியமான கூத்துக்கலையை அதன் அத்தனை அழகியலுடனும் அதன் மிகச்செறிவான பண்பாட்டுவளத்துடனும் எமக்கு எடுத்து சொன்னவர்.(சித்திரவேலாயும்).கூத்துகலையின் அத்தனை பாத்திரங்களுக்கும் ஏற்றதான ஒரு சாரீரவளமும், உச்சஸ்தாயில் பாடினாலும் பிசிர் வீழாத அற்புதமான குரல் வளமும் சித்திரவேலாயுதம் அவர்களின் சொத்து.
இன்னொருவர் மானுடத்தின் மிக முன்னோடியான வெளிப்படுத்தும் கலையான ஓவியத்தை எமது மண்ணுக்கே உரியதாக எமக்கு காட்டியவர்.(மோகனதாஸ்)நிறங்களை கலப்பதிலும் அதனை மிக சாதாரணமாக தேவைப்படும்படும் இடங்களில் தீட்டி நாம் எப்போதும் பார்த்து வந்த அதே கடல்அலைகளதும்,கடற்கரையினதும் காட்சிகளை மிகப்புதிதான ஒரு கோணத்தில் எமக்குள் செலுத்தி பரசவப்படுத்திய ஓவியர் மோகனதாஸ்.
இந்த இருவரினதும் மரணச்சேதி கேட்டபோது எமது பள்ளிநாட்களில் இந்த இருவரையும் எத்தனை அண்ணாந்து பார்த்து இருக்கின்றோம் என்ற நினைவுகளே மீள எழுகின்றன.
ஒரு முழுஇரவு முழுதும் அரங்கத்தை ஆளுமை செய்த அந்த குரலுக்கு சொந்தகார மனிதரான சித்திரவேலாயுதம் அவர்களை அதன் பின்னர் தூரத்தே கண்டாலும்கூட அத்தனை காத்தான் பாத்திரமும் அவற்றின் சாகசங்களும், கிளியாக மாறிடும் அற்புதமும்,ஏழுகடல் தாண்டிய சாதனையும்,கழுமரத்தில் ஏறுவதற்காக ஒவ்வொரு படியாக ஏறியபொழுதின் காட்சிகளும் எப்போதும் எமக்குள் எழுந்து மிகப்பெரும் மரியாதையுடனேயே அவரை கடப்போம்.
அதன்பின்னர் எமது தாயகத்தின் அத்தனை முனைகளிலும் காத்தான்கூத்துகளையும்,வடமோடி கூத்துகளையும் பார்த்திருந்த பொழுதுகளில் ஏனோ அவற்றுடன் எம் ஊரின் பெரும் கலைஞன் சித்திரவேலாயுதம் அவர்களை பொருத்தி ஒப்பிட்டு பார்த்து பெருமை கொள்வது பழக்கமாக இருந்தது.
அதனை போலவே எமது வயது வளரவளர ஓவியத்தின் அத்தனை நிறத்தேர்வுகளையும் அதன் ஒவ்வொரு கோடுகளும் திறந்துவைக்கும் புதிய சிந்தனைவெளியையும்; புரிந்துகொண்டபோதும் எனக்கு ஏனோ எம் சிறுவயதில் வல்வை காய்கறிச்சந்தைக்கு முன்னால்உள்ள கிட்டங்கியில் மோகனதாஸ் வரைந்து கொண்டிருந்த கண்ணாடி ஓவியங்களின் அழகு என்னவோ மிகமிக மனதுக்கு இதமானதாகவே இன்றும் தொடர்ந்துவருகிறது..இப்போதும்கூட.
இத்தனைக்கும் ஓவியத்தின் பின்நவீனத்துவ பாணி,அதன் வான்காக் பாணி,மொனெட்பாணி என்று அத்தனை ஓவியமரபுகளும் தெரிந்த பின்னும்கூட மோகனதாஸ் என்ற என்மண்ணின் கலைஞனை எந்தவொரு விமர்சனங்களும் இல்லாமல் மனது ஏற்கிறது என்றால் அவன் எம் சிறுவயது ஆகர்சங்களில் ஒருவராக இருந்திருந்தார் என்பதாலேயே.நிற்க,
இந்த இருபெரும் கலைஞர்களையும் எட்ட இருந்து பார்த்து ரசித்தபொழுது தாண்டி இவர்களை அணுகி பழக ஏற்பட்ட சந்தர்பங்களையும் இதில் குறிப்பிட்டாக வேண்டும்.
எமது இளம்பறவைகள் கழகத்தால் நானும் வல்வெட்டித்துறை குமார் அச்சகத்தின் இரண்டாவது மகன் குமாரும் இணைந்து பறவை என்று ஒரு கையெழுத்து இதழை சந்தி வாசிகசாலையில் ஆரம்பித்தோம்.
அதன் முதலாவது இதழுக்கு குமார் (கிருஸ்ணகுமார்) வரைந்த ஒரு ஓவியம் யாசீர்அரபாத் ஒரு கையில் ஒலிவ் இலையுடன் ஐநா மண்டபத்தில் நடந்துவரும் தோற்றம்.ஏறத்தாள பத்து பதினைந்து மாதிரிகள் வரைந்து கொண்போய் மோகனதாஸ் அண்ணாவிடம் கொடுத்து அதில் மாற்றங்களை திருத்தங்களை கேட்டோம்.அப்போதுதான் எனக்கும் குமாருக்கும் ஒருவரின் கை எப்படி வரையப்படவேணும் ஒரு முகத்தின் பக்கவாட்டு தோற்றத்தின் ஒளிபடும் இடங்கள் எவை என்று ஏராளம் சொல்லி தந்தார் மோகன்அண்ணா.
அன்று மோகன்அண்ணாவிடம் ஓவியத்தின் நுட்பங்களை  படித்த குமாரை வரலாறு தமிழர்களின் வரலாற்றின் மிகப்பெரும் அதிமானுடனாக்கியது.சங்கிலியனுக்கு பின்னர் தமிழர் இறைமையை மீள எடுத்த ஒருவனான குமார் உருவாக்கிய அத்தனை வெளியீடுகள்,பத்திரிகைகள்,பிரசுரங்கள் எல்லாவற்றிலும் அவனின் நிறத்தேர்வுகள்,பக்க லைன்கள் என்று அனைத்து தேர்வுகளும் ஒரு அற்புதமான தெரிவாக இருந்ததற்கு காரணங்களில் மோகன்ஆட்ஸ்ம் ஒருவர்.
ஏன்,குமார் பின்பொருநாள் மெக்சிகோ நாட்டின் மெக்சிகோசிட்டியில் ஓவியத்தை ஆழ கற்று திரும்பி அவன் வரைந்த ஓவியங்களை பற்றி அவன் என்னுடன் கதைத்த பொழுது ஒவ்வொன்றிலும் மோகன்அண்ணா அன்று ஆரம்பித்து வைத்த ஓவியகலை அறிமுகத்தை மறக்காமல் நினைவு கொண்டவன்.
அதனை போலவே எமது பறவை இதழின் முலாவது இதழுக்கு எம் பண்பாட்டின் மிகவும் செழுமை மிக்க கூத்துகலையின் கலைஞன் சித்திரவேலாயுதம் அவர்களையே நேர்கண்டு எழுத என்று முடிவு எடுத்து சென்றபோது எந்தஒரு அறிமுகமும் இல்லாத எமக்கு சிறிய வயதவர்களான எமக்கு மிக ஆறுதலாக எல்லாம் விளக்கி எம் கேள்விகளுக்கு பதிலையும் பாட்டுகளையும் தந்த அந்த அற்புத கலைஞன் என்றும் நினைவுகளில் இருக்க வேணும்.
நாளையும் ஏதோ ஒரு இரவுப்பொழுதில் காற்றில் மிதந்துவரும் காத்தான்பாடல்களில்,தமிழர்களின் பண்பாட்டு குறியீடுகளில் சித்திரவேலாயுதம் என்றென்றும் இருந்துவருவார்.
இன்று நாம் பார்க்கும் முதலாவது மாவீரன் சத்தியநாதனின் படத்துக்கு ஏற்றப்பட்ட நிற மெருகும், சத்தியநாதனின் சீருடையும் அதனை போலவே பண்டிதரின் வெறும் அடையாளஅட்டை போட்டோவுக்கு போராளி சீருடை வரைந்த அந்த மோகன்அண்ணா நாளை நாம் பார்க்கும் அத்தனை ஓவியபொழுதுகளிலும் நினைவிருப்பார்.
பண்பாடு என்பது வேறு என்ன..? இப்படியான மனிதர்கள் தத்தம் பங்குக்கு முன்னெடுத்த கலை வெளிப்பாடுகளின் மொத்த திரட்சிதானே..
என்றும் நினைவு கொள்ள வேண்டியவர்கள் இவர்கள்.எம் மண்ணின் கலை வெளிப்பாடு இவர்கள்.

ச.ச.முத்து

 
Leave a Reply

Your email address will not be published.