கிளிநொச்சியில் இடம்பெற்ற ‘தமிழர் உறவுமுறைச் சொல்வழக்கு அகராதி’ நூல் வெளியீட்டு விழா
ஈழத்தில் இருந்து தமிழுக்கு இன்னுமொரு நன்னூல் கிடைத்திருக்கிறது. ஈழத்தின் மதிக்கத்தக்க கவிஞர், எழுத்தாளர், ஆசிரியர் பண்டிதர் வீ.பரந்தாமன் அவர்கள் எழுதிய ‘தமிழர் உறவுமுறைச் சொல்வழக்கு அகராதி’ நூலின் வெளியீட்டு விழாவானது, 31.10.2016 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 03.30 மணிக்கு, கிளிநொச்சி நகர் கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வுக்கு கிளிநொச்சி கல்வி வலய தமிழ்ப்பாட பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருவாட்டி. பிறேமா மதுரநாயகம் தலைமை வகித்தார். வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொள்ள இருந்தபோதும், தவிர்க்க இயலாத காரணத்தினால் அவர் கலந்துகொள்ளவில்லை. அவரது வாழ்த்துச்செய்தியினை, வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சர் குருகுலராசா தனதுரை வேளையில் அளித்தார்.
தமிழ் இன்னிய அணிவகுப்பினை கிளிநொச்சி உருத்திரபுரம் மகா வித்தியாலய மாணவர்கள் ஆற்றினர்.
மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்தினை கிளநொச்சி உருத்திரபுரம் மகா வித்தியாலய மாணவர்கள் இசைத்தனர். வரவேற்பு நடனத்தினை பண்டிதர் பரந்தாமன் கவின்கலைக் கல்லாரி மாணவர்கள் வழங்கினர். வரவேற்புரையினை கிளி/உருத்திரபுரம் மகா வித்தியாலய ஆசிரியை திருவாட்டி. உதயமலர் பார்த்தீபன் வழங்கினார்.
வாழ்த்துரையினை பண்டிதர் பரந்தாமன் கவின்கலைக் கல்லாரி இயக்குநர் க.செளந்தரராசா வழங்கினார்.
சிறப்புரையினை வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சர் த.குருகுலராசா நிகழ்த்தினார்.
நூலினை யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் வெளியிட்டு வைக்க, முதற்பிரதியினை கிளிநொச்சி காவேரி கலாமன்றம் இயக்குநர் வணபிதா யோசுவா அடிகளார் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டது.
கருத்துரையினை யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வழங்கினார். நூல் பற்றிய நயப்புரையினை கிளிநொச்சி உருத்திரபுரம் மகா வித்தியாலய அதிபர் திருவாட்டி. மீனலோஜினி இதயசிவதாஸ் வழங்கினார்.
பண்டிதர் வீ.பரந்தாமன் அவர்களின் போர்க்கால படைப்புக்கள் குறித்த பகிர்வினை ‘செல்லமுத்து வெளியீட்டகம்’ இயக்குநர் யோ புரட்சி பகிர்ந்தார்.
ஏற்புரையினை நூலாசிரியர் பண்டிதர் வீ. பரந்தாமன் அவர்கள் வழங்கினார். நன்றியுரையினை பண்டிதர் பரந்தாமன் கவின்கலைக் கல்லூரி துணை இயக்குநர் சி.ஜீவநாயகம் வழங்கினார்.
இந்த உறவுமுறைச் சொல்லகராதியில், தமிழர்கள் பாவித்த, பாவிக்கின்ற, பாவிக்ககூடிய உறவுமுறைச் சொற்கள் நிறைந்து கிடக்கின்றன. கொச்சைத்தமிழ் உறவுச் சொற்களுக்கும் விளக்கங்கள் உள்ளன. உதாரணமாக ஆயி என்றால் தாய். முன்னை என்றால் தமக்கை மற்றும் தமையன்.


























