தாயக செய்திகள்

காற்றில் நின் பெயரிருக்கும் பூபதியெனும் நாமம் பூப்பூவாய்ப் பூத்திருக்கும்.

காற்றில் நின் பெயரிருக்கும்
காலமெலாம் நினைவிருக்கும்
போற்றி நின்தாழ் பணியும் பூவுலகில் பூபதியெனும் நாமம் பூப்பூவாய்ப் பூத்திருக்கும்….

பாரதம் விதைத்த வினையறுக்கப்
பார்த்திபன் நின் அறவழி நின்றெம்மை
ஊற்றாக உள்ளிருந்து உயிர்கலந்து
உணர்வுதரும் உள்ளொளியே தாயே..!
பெண்ணாய் நின்று, நிமிரந்தெழுந்து
பேரிடியாய்ப் பகையெதிர்த்து
உண்ணா நோன்பிருந்து உயிர்கொடுத்த மகத்துவமே, மண்ணின்பேறே!
அன்னையே! பூபதியே எங்கள்
அறவழியின் திருவுருவே…!

காற்றில் நின் பெயரிருக்கும்
காலமெலாம் நினைவிருக்கும்
போற்றி நின்தாழ் பணியும் பூவுலகில் பூபதியெனும் நாமம் பூப்பூவாய்ப் பூத்திருக்கும்….

உண்மைக்காய் உயிர்கொடுக்கும்
உன்னத தியாகம் ஊமையின் குரலாய்
ஓங்கி ஒலிக்கவில்லை…
உலகமெலாம் காந்தியம் கற்பித்த
கயமை நிறைந்த கனவான்களுக்கு
திலீபம் புரியவில்லை, பூபதி எனும் தீபமும் தெரியவில்லை…
இரண்டகர்கள் … இரண்டாவது முறையும் விழிமூடிக்கிடந்தார்கள்,
காக்கவழியின்றிக் கண்ணீர்விடும் அபலைகளாய் அந்தரித்தது தேசம்….
எம் அழுகுரல்களெல்லாம் எதிரியின் எல்லைக்கோடுகளுக்குள்ளேயே அடங்கிப்போனது அன்று….
ஆனால்,
நீங்கள் எரிந்து எரிந்து ஏற்றிவைத்த சுதந்திர தீபம் இன்றுவரை சுடர்கிறது…
பற்றிப்படர்ந்தபடி எம் பாதைவழி தொடர்கிறது…
சுட்டெரிக்கும் சூரியனும் கிட்ட நெருங்கமுடியா அக்கினித் தீபமாய்
சுடர்விடும் ஒளியில் சூழ்ந்திருக்கும் இருளகற்றி சுதந்திரத்தீ படர்கிறது …

‘காற்றில் நின் பெயரிருக்கும்
காலமெலாம் நினைவிருக்கும்
போற்றி நின்தாழ் பணியும் பூவுலகில் பூபதியெனும் நாமம் பூப்பூவாய்ப் பூத்திருக்கும்…’
-காந்தள்-
19/04/2018

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *